டில்லி:
பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு பின் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில் தெரிவித்தார். அப்போது வருமான வரி தாக்கல் செய்வோரது எண்ணிக்கை 24 லட்சம் உயர்நதுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், அவர் பேசுகையில், ‘‘ கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 56 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 22 லட்சம் பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்தனர். எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. கறுப்பு பணத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது’’ என்றார்.
ஆனால், கடந்த 12ம் தேதி பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தனது 2வது பொருளாதார சர்வே முடிவுகளை வெளியிட்டார். அதில் புதிதாக 5.4 லட்சம் வரி செலுத்த தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது பிரதமரின் 24 லட்சம் அதிகரிப்பு என்பதற்கு எதிராக உள்ளது.
கடந்த 2ம் தேதி மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில், புதிதாக 33 லட்சம் பேர் வரி செலுத்த தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.
கடந்த மே 17ம் தேதி நிதியமைச்சர் அருண்ஜெட்லி புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 91 லட்சம் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். வருமான வரித்துறையின் நடவடிக்கையால் இந்த அதிகரிப்பு ஏற்பட் டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுவும் பிரதமரின் அறிவிப்புக்கு முரணாக இருந்தது.
இதன் மூலம் புதிதாக வரி செலுத்துவோர் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் 24 லட்சம் என்கிறார். அரவிந்த் சுப்ரமணியன் 5.4 லட்சம் என்கிறார். சந்தோஜ் கங்வார் 33 லட்சம் என்கிறார். அருண்ஜெட்லி 91 லட்சம் என்று தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மத்திய அரசால் இது குறித்த உண்மையான தகவல்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் எவ்வளவு கறுப்பு பணம் வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் புதிதாக வரி செலுத்துவோர் குறித்த விபரங்களும் முன்னுக்கு பின் முரணாக தெரிவிக்கப்ப டுகிறது.
அதனால் இந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் வகையில் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லாமை, அதிக குழப்பங்கள் ஜனநாயக நடைமுறையை பாதிக்கும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.