நயாகரா ஃபால்ஸ் (கனடா) :
சுதந்திர தினத்தை முன்னிட்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் பதினைந்து நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி இடம்பெறுகிறது.
ஆண்டு முழுவதும் உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் இரவு நேரத்தில் ஒளிக்காட்சி நடத்துவது. உண்டு. அருவி நீரின் மீது வண்ண விளக்குள் மூலம் ஒளி பாய்ச்சப்பட்டு, அருவி வித விதமான வண்ணங்களுடன் காட்சி தரும். இசையும் அதற்கு ஏற்றார்போல் இசைக்கப்படும்.
பருவக்காலங்களான குளிர் காலம், கோடை, இலையுதிர்காலம் என ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ப இந்த ஒளிக்காட்சியின் நேரம் மாறுபடும். ஒரு சில சிறப்புக் காரணங்களுக்காக, குறிப்பிட்ட வண்ணங்களில் மட்டும் ஒளிக்காட்சிக்கு அனுமதி உண்டு. நமது நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, செவ்வாய்கிழமை அமெரிக்க கிழக்கு நேரப்படி இரவு 10 மணி, நமது தேசியக் கொடியின் வர்ணத்தில் ஒளிக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கனடா பகுதியில் உள்ள நயாகரா பூங்கா கமிஷன் அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது. இது ஏதாவது இந்திய அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது அரசு சாரந்த விஷயம் என்பதால் அது குறித்து விவரம் தெரியவில்லை. ஆனால் யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி இத்தகைய காட்சிக்கு ஏற்பாடு செய்யமுடியாது, அதே நேரத்தில் தக்க காரணங்களுடன் அணுகுபவர்களுக்கு, அரசின் நடைமுறைப்படி ஆராய்ந்து அனுமதி வழங்கப்படும். அதை வைத்து ஒளிக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். அதாவது, வெறுமனே குறிப்பட்ட தொகையை செலுத்தினால் மட்டும் இந்த காட்சி அனுமதிக்கப்படுவதில்லை.
கனடா நாடு இந்தியாவின் 70 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த மூவர்ண ஒளிக்காட்சி அமைத்துள்ளது. அதே நேரத்தில் கனடா பகுதியிலிருந்து மட்டும் அல்ல, அமெரிக்க பகுதியிலிருந்தும் இதைக் காண முடியும்.
நயாகராவை இதற்கு முன் பல்வேறு நிறங்களில் ஒளிர வைத்தாலும், இந்திய தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவைப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
கனடா நாட்டின் 150 பிறந்த நாள் சமீபத்தில் தான் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. .