காந்திநகர்,

குஜராத்தில், மாநில மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு  நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்கள், அகில இந்திய அளவில்  நீட் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு சட்ட திருத்தம் வெளியிட்டது.

அதையடுத்து இந்த ஆண்டு முதல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீட் தேர்வை மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்துவதால், மாநில மொழி பாடத் திட்டத்தி ல் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டதிருத்தம் கொண்டுவர முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், குஜராத்தில், மாநில மொழியான குஜராத்தி மொழியில் படிக்கும் மாணவர்களுக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் பாரத் சோலங்கி தலைமையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் கவர்னர் ஓ.பி.கோஹ்லியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

மனுவில்,  குஜராத் மாநில மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்த விலக்கு அளிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு, நடுத்தர மக்களுக்கு அநீதியானது என்றும்  கோரிக்கை வைத்துள்ளனர்.