நாக்பூர்

னியார் மருத்துவமனைகளில் தரப்படும் அளவு வசதிகள் அரசு மருத்துவமனைகளால் தர முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

நாக்பூரில் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் மருத்துவமனை முதல் பகுதியின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.  அந்த விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ், ரத்தன் டாடா, அமைச்சர்கள் நிதின் கட்காரி, பியூஷ் கோயல், மற்றும் தர்மேந்திரா பிரதான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அந்த விழாவில் உரையாற்றும் போது நிதின் கட்காரி தெரிவித்ததாவது:

”தனியார் மருத்துவமனையில் ஐந்து நட்சத்திர வசதிகள் கிடைக்கும்.  ஆனால் அரசு மருத்துவமனையில் அந்த அளவு வசதிகள் இருக்காது.  அதற்கு பல காரணங்கள் உள்ளன.  தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் இல்லாமை, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லாமை, நிதி பற்றாக்குறை, அரசின் சட்ட திட்டங்கள் போன்றவைகளே முக்கிய காரணம்.   இதனால், சமூக நல நிறுவனங்கள் முன் வந்து வசதியற்றோருக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்.   அத்தகைய நிறுவனங்களுக்கு, அரசு நிலங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும்” என கூறினார்.

பலரும் இந்த உரை கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் மரணம் அடைந்ததை குறிப்பிடப் படுகிறதோ என ஐயமுற்றனர்.

முன்னதாக உரையாற்றிய மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ், “ எனது தந்தையார் புற்று நோயால் மரணம் அடைந்தார்.  அவருடைய சிகிச்சைக்காக நான் மும்பையில் இருந்த டாட்டா புற்றுநோய் மருத்துவமனைக்கு பல முறை சென்றுள்ளேன்.  அங்குள்ள பல வசதிகளை நான் நேரடியாக கண்டுள்ளேன்.    அந்த வசதிகள் ஏழைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டதையும் நான் அறிவேன்.   அது போல நாக்பூரிலும் வழங்கப்படும் என நம்புகிறேன்” எனக்கூறினார்.

ஃபட்னாவிஸ் முதல்வராகும் முன்பிருந்தே ஒரு புற்றுநோய் மருத்துவமனையை தனது டிரஸ்ட் மூலம் நாக்பூர் அருகே நடத்தி வருவது தெரிந்ததே