கோபிநாத்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” நிகழ்ச்சி, நேயர்களிடையே ஏக பிரபலம். “சமுதாய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் விவாதம்” என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. அதே நேரம், “பரபரப்புக்காக, தேவையற்ற தலைப்புகளில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்” என்ற விமர்சனமும் உண்டு.

செல்லபாண்டி

இந்த நிலையில், “நீயா நானா நிகழ்ச்சியில் பொய் சொல்லி என்னை அழைத்து, மனநோயாளி என அவமானப்படுத்திவிட்டார்கள். அதனால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் எல்லோரும் என்னை வேறு மாதிரி பார்க்கிறார்கள். நடத்துகிறார்கள். பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் இருக்கிறேன்” என்று கண்ணீருடன் சொல்கிறார் செல்லப்பாண்டி.

இதோ.. நடந்தது என்ன என்பதை  தொடர்ந்து அவரே விரிவாகச் சொல்கிறார்:

“கடந்த மே மாதம், விஜய் டி.வி. பணியாளர்கள் என்று சொல்லிக்கொண்டு  அய்யப்பன், அஸ்வின் என்கிற இருவர் என்னைத் தொடர்புகொண்டனர்.  அவர்கள், “நீங்கள், “தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்” நடத்தி வருவதால், இது போன்ற சிறு அமைப்புகளை நடத்திவருபவர்களை அழைத்து நீயா நானா நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். நிகழ்ச்சியில் பங்குகொண்டு உங்கள் சங்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகளை விவரிக்கலாம்” என்றனர்.

“நல்ல விசயம்தானே” என்று நினைத்து அந்த நிகழ்ச்சியின் படப்படிப்புக்குச் சென்றேன். சென்னை வடபழனியில்உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

அங்கு சென்றபோது கவனித்தேன். மொத்தம் 25 நபர்களை அழைத்திருந்தார்கள்.  அவர்களில் நான் மற்றும் “ஜெபமணி ஜனதா” கட்சியின் தலைவர் மோகன்ராஜூ ஆகியோரைத் தவிர மற்றவர்கள் வேறு மாதிரியாக  இருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் காசியில் இருந்து வந்த அகோரி. இன்னொருவர், தான் வர்ணபகவான் மகன் என்றும் தான் நினைத்தால் மழை பெய்யும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

“ரயிலில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லையா.. நான் கொடுக்கும் மாத்திரையை சாப்பிடுங்கள் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார் மற்றொருவர்.

அவர்களைப் பார்க்கையில் வித்தியாசமாக இருந்தது.

ஆனாலும் அவர்களை வேறு காரணத்துக்காக படப்படிப்புக்கு அழைத்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

நிகழ்ச்சி துவங்கியது.

“நீயா நானா” நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்ட்டனி

நான் பேசும்போது, “எங்களது அமைப்பு தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் அல்ல. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம். மது விலக்குத்தான் எங்கள் குறிக்கோள். அது வரும் வரையில் மது குடிப்போருக்குக்காவும் மற்ற மக்கள் நலனுக்காகவும் சில நடவடிக்கைகள் எடுக்கக்கோரி போராடி வருகிறோம்” என்று தெளிவாகச் சொன்னேன்.

மேலும், “தமிழ்நாட்டில் மது குடிப்போர் ஒரு கோடி பேர். இவர்களில் பலர் உடல் நலம் கெட்டு மரணமடைகிறார்கள். மது விற்கும் பணத்தில் இருந்து ஒரு பகுதியை இவர்களின் மருத்துவத்துக்காக அரசு ஒதுக்க வேண்டும். குடித்து  மரணடைவோரின் பெற்றோர், மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.  ஊருக்குள் பல இடங்களில் மதுக்கடை இருப்பதால், குடி பிரியர்களால் மற்றவர்களு்ககு சங்கடம் ஏற்படுகிறது. ஆகவே ஊருக்கு வெளியே அனைத்துவி மதுவகைகளும் கிடைக்கும்படி ஒரு உல்லாச நகரம் அமைக்க வேண்டும். மது குடிப்போர் அங்கு சென்று குடித்து, தெளியும் வரை அங்கேயே பொழுது போக்கி, தெளிந்தவுடன் அங்கேய மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு ஊருக்குள் திரும்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால் குடிப்பவர்களுக்கும் பிரச்சினை இல்லை.. பொது மக்களுக்கும் அவர்களால் பிரச்சினை இல்லை. குடிப்பவர்கள் கால் சட்டை போன்ற ஜட்டி அணிய வேண்டும். இதனால் மது குடித்தாலும் மானத்தோடு வாழலாம்” என்ற எங்கள் கோரிக்கைகளை அந்த நிகழ்ச்சியில் பதிவு செய்தேன்.

அப்படியும் புரியாமல் அங்கு பார்வையாளராக வந்த சிலர், கிண்டலாக என்னை கேள்வி கேட்டனர். நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத்தும் கிண்டலாக என்னை பேசினார்.

ஆக அங்கு “விநோத” மனிதர்களாக வந்திருந்த 23 பேருடன் என்னையும், ஜெபமணி ஜனதா கட்சி தலைவர் மோகன்ராஜையும் சேர்த்துவிட்டார்கள்.

நிகழ்ச்சிக்கு மனோதத்துவ நிபுணர்கள் என்று கூறப்பட்ட இருவர் வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சி முடிவில் அவர்கள், “இந்த 25 பேரும் மனநோயாளிகள். அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அவசிம்” என்று பேசினார்கள்.

அப்போதே மோகன்ராஜ், இதை எதிர்த்தார். ஆகவே அவரது பகுதியை எடிட் செய்துவிட்டனர்.

ஆக “விநோத” மனிதர்களுடன் என்னையும் சேர்த்து மனநோயாளி என முத்திரை குத்திவிட்டார் நீயா நானா கோபிநாத்” என்று குமுறலுடன் கூறினார் செல்லபாண்டி.

சற்று நேர மவுனத்துக்குப் பிறகு அவரே தொடர்ந்தார்:

“நான் சிசி டிவி கேமரா, எலக்ட்ரானிக் எடை மிசின் ஆகியவற்றை  மார்க்கெட்டிங் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என் மனைவி பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இரு பெண்குழந்தைகள்.. அவர்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

 

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியாளர்களுக்கு செல்லபாண்டியனின் உருக்கமான வேண்டுகோள் ( ஆடியோ)

 

“நீயா நானா” நிகழ்ச்சியில் என்னை மனநோயாளி என்று கூறியதால், என்னை குடும்பத்தினரும், உற்றார் உறவினரும் அக்கம்பக்கத்வரும் வேறு மாதிரி பார்க்கிறார்கள். ஆசிரியையான என் மனைவி பள்ளிக்குச் செல்லும்போது அங்கு என்னைப்பற்றி  வேறுவிதமாக விசாரிக்கிறார்கல், கல்லூரிக்குச் செல்லும் என் இரு மகள்களை சக மாணவிகள் சிலர் கிண்டல் செய்ததால் மனம் வெறுத்து கல்லூரிக்குச் செல்வதற்கே அவர்கள் பயப்படுகிறார்கள்.

சுயமாக சம்பாதித்து குடும்பத்தலைவனாக இருந்த நான், பொது நோக்கத்துக்காகவும் போராடி வந்தேன். இப்போது குடும்பத்தினரே என்னை வித்தியாசமாக பார்க்கும்படியாக நீயா நானா நிகழ்ச்சியும் கோபிநாத்தும் ஆக்கிவிட்டார்கள்.

உற்றார் உறவினர் அக்கம்பக்கத்தாரால் மட்டுமின்றி சொந்த குடும்பத்தினராலேயே ஒதுக்கப்படும் நிலையில் நான் என்ன செய்வது.. தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறேன். இதற்கு முழுக் காரணம் நீயா நானா நிகழ்ச்சிதான்” என்றார் வேதனையுடன்.

நாம், “நீயா நானா” நிகழ்ச்சி தொகுப்பாளரான கோபிநாத்தை தொடர்புகொண்டு,  செல்லப்பாண்டியன் தெரிவித்ததை கூறி அவரது விளக்கத்தை கேட்டோம். அவர், “நான் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமே. இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஆண்ட்டணிதான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

ஆண்ட்டணி எண்ணில் பலமுறை தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.  அவர் பதில் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

“சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நீயா நானா நிகழ்ச்சியை நடத்துகிறோம்” என்று சொல்லிக்கொண்டு, வெற்று பரபரப்புக்காக ஒருவரை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளலாமா” என்பதுதான் அனைவரின் கேள்வியும்.

 

–    டி.வி.எஸ். சோமு

(ஜெபமணி ஜனதா கட்சியின் தலைவர் மோகன்ராஜூவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டதாக விஜய் டிவிக்கு நோ்டடீஸ் அனுப்பியிருக்கிறார். அவரது பேட்டி அடுத்து…)