கோட்டயம்:

கேரளாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் யானைகள் வளர்ப்பது வாடிக்கையான விஷயம். கோவில்களின் முக்கிய விக்ரகங்களை யானை மீது ஏற்றி வீதி உலாவும் வருவார்கள். ஆனால் தேவாலயம் ஒன்றில் யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது புது சம்பவமாக கருதப்படுகிறது.

கோட்டயம் மாவட்டம், அருவிதாரா என்ற இடத்தில் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இங்கு கடந்த இரு தினங்களுக்கு முன் 20 வயது யானைக்கு பாதிரியார் ஒருவர் ஆசிர்வாதம் அளித்துள்ளார்.

இது குறித்து மூத்த பாதிரியார் தாமஸ் வெடிகுன்னெல் கூறுகையில், ‘‘ ஆமாம், ஒரு யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது. தேவாலயத்தை சேர்ந்த இளம் பாதிரியார் ஆசிர்வாதம் அளித்தார். இதில் என்ன அதிசயம் உள்ளது. யானைக்கு ஞானஸ்தானம் அளிக்கப்படவில்லை. ஆசிர்வாதம் தான் அளிக்கப்பட்டது’’ என்றார்.

கேரளாவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி பி.சி.ஜார்ஜ் அந்த தேவாலயத்தின் உறுப்பினர். அவர் கூறுகையில், ‘‘எனது பழதோட்டம் குடும்பத்தில் பல ஆண்டுகளாக யானைகள் வளர்க்கப்படுகின்றன.

தேவாலயத்தில் ஆசிர்வாதம் பெற்ற யானை என் உறவினருக்கு சொந்தமானது. அந்த யானையின் பெயர் மகாதேவன். 20 வயது இருக்கும். தேவாலயத்தில் ஆசிர்வாதம் பெற்றதால் யானையின் பெயர் மாற்றப்படும் என கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை’’ என்றார்.