ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நிலோஃபர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி ஒன்று, 6000 குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்க்கு பால் சுரப்பு கம்மியாகவே இருக்கும். சிலருக்கு பால் சுரக்கவே சுரக்காது. இந்த வேளைகளில் மருத்துவரின் உடனடி சிபாரிசு என்பது பசும் பால் அல்லது குழந்தைகளுக்கான பவுடர் பால் மட்டுமே. ஆனால் இவைகளில் தாய்ப்பாலில் இருக்கும் அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் இருக்காது. குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை தாய்ப்பாலால் மட்டுமே தர முடியும்.
இந்த குறை நீக்க ஐதராபாத் நிலோஃபர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட உள்ளது. இதில் மாநிலம் எங்கும் தாய்மார்களிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டு சேகரித்து வைத்து தேவையான நேரங்களில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும். இது வட அமெரிக்காவில் உள்ள தாய்ப்பால் சேகரிப்பு கழகத்தின் வழிமுறைகளின்படி பாதுகாத்து வைக்கப்படும். இந்த பால் 70 டிகிரியில் பாதுகாக்கப் படுவதால் ஆறு மாதம் வரை உபயோகப்படுத்த முடியும்.
தாத்ரி என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இந்த வங்கியை நடத்து உள்ளது. இதுவரை நாடெங்கும் இது போல் சுமார் 15 வங்கிகள் உள்ளன. ஐதராபாத் நகருக்கு இதுவே முதல் வங்கியாகும். இது பற்றி தாத்ரி நிறுவனத்தின் தலைவர் சந்தோஷ் குமார், “ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பது அந்தக் குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும். ஆனால் 37% குழந்தகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது. ஆகவே அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்க வழி செய்யவே இந்த வங்கி தொடங்கப்பட உள்ளது” என கூறினார்.