இலங்கைக்கு கடலோர காவல் கப்பலை வழங்கிய மத்திய அரசை கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “இலங்கை அரசுக்கு கடலோர காவல் கப்பல் ஒன்றினை இந்திய அரசு வழங்கியுள்ளது.ஏற்கனவே தமிழக மீனவர்களை வேட்டையாடும் சிங்கள கடற்படைக்கு இது மேலும் தூண்டுகோலாக அமைந்து தமிழக மீனவர்களை கொன்று குவிக்க உதவும்.
பிரதமர் வாஜ்பாய் அரசில் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது இத்தகைய கப்பல்ஒன்றினை இலங்கைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
அப்போது வைகோ அவர்களும் நானும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்களை சந்தித்து இக்கப்பலை வழங்கக் கூடாது என வலியுறுத்தினோம். அவரும் பிரதமரின் ஒப்புதலைப் பெற்று கப்பல் வழங்குவதை நிறுத்தினார்.
ஆனால் பிரதமர் மோடி காலத்தில் தமிழக மீனவர்களை வேட்டையாடுவததற்கு சிங்கள அரசுக்கு கடலோரக் காவல் கப்பல் வழங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தனது அறிக்கையில் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்