சென்னை

யர்நீதிமன்றம் கார்மெண்ட் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு 30% ஊதிய உயர்வு தரவேண்டும் என அளித்த தீர்ப்பை ஒட்டி இழப்பீட்டுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்

கார்மெண்ட்ஸ் எனப்படும் ஆயத்த ஆடைகள் உருவாக்கும் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் உள்ளது.  அதில் பெரும்பாலும் பெண்களே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.  அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.  ஊதிய உயர்வு தரப்படுவதே இல்லை.  சில இடங்களில் ஊதிய உயர்வு என்னும் பெயரில் மிகவும் சொற்பமான தொகையே உயர்த்தப்படுகிறது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஊழியர்களுக்கு ரூ.4500 லிருந்து ரூ. 6000 வரை ஊதிய உயர்வு கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட வேண்டும் என ஒரு தீர்ப்பில் கூறியிருந்தது.  கடந்த 12 ஆண்டுகளாக இதுவரை அளிக்கப்படாத ஊதிய உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.  ஆனால் இதுவரை அந்த ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை.

இதனால் பல தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதால் இழப்பீடு கேட்டு அவர்கள் நீதிமன்றத்தின் வாசலில் காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   அப்படி நீதிமன்றத்துக்கு வரும் நாட்களில் அவர்களுக்கு ஊதியம் அளிப்பதில்லை என்பது மற்றொரு வேதனை ஊட்டும் தகவல்.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத பெண் ஊழியர் ஒருவர், “ஒருநாள் ஊதியம் என்பது பெரும் தொகை அல்ல, ஆனால் என்னுடைய நிலைமைக்கு அது ஒரு நாள் உணவு.  நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்ததற்கான ஊதியத்தை பெற நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது.  எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகையை நிறுவனம் தர மறுக்கிறது.  எப்படி எங்களுக்கு ஊதியத்தை கணக்கிடுகிறார்கள் என்னும் விவரம் கூட எங்களுக்கு சொல்லப்படவில்லை,” என கூறினார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ், கிடைக்கப்பட்ட செய்தியின் படி இது போல சுமார் 150 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.  சுமார் 80000 தொழிலாளர்களுக்கு தரப்பட வேண்டிய தொகை ரூ 49 கோடி ஆகிறது.  இந்த வழக்குகளை அரசின் ஊழியர் நல வாரியம் நடத்துகிறது.  ஊழியர் சங்கங்கள் அவர்களுக்கு உதவி புரிகின்றன.

அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் எந்த ஒரு ஊழியருக்கும் ஊதியம் கிடைப்பதில்லை.   அவர்களை பொதுவாக பயிற்சியாளர்கள் என பணியில் அமர்த்துவதால் ஊதிய விவரம் அடங்கிய சீட்டுகளும் தரப்படுவதில்லை.

“நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தை தராமல் இருப்பதோடு, அவர்களின் உரிமையையும் பறிக்கிறது.  நீதிமன்றம் உத்தரவளித்தும் இன்னும் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது”  ஒரு சில வேளைகளில் ஊதிய உயர்வு வழங்குவதற்கு பதில் பழைய ஊழியர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதும் நடைபெறுகிறது.  புதிய ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் அளித்தாலே போதுமானது என்பதே இதற்குக் காரணம் என்கிறார் வழக்கறிஞர் செல்வி பழனி.  இவர்தான் இந்த வழக்குகளை நடத்துபவர்.

அரசு தரப்பில், ”ஊதிய உயர்வு குறித்து அரசு ஆணையிட்டால், உடனே அதை எதிர்த்து வழக்கு தொடுப்பதும், வழக்குகளை இழுத்தடிப்பதும் வழக்கமான ஒன்று.  எங்களால் முடிந்தவரை நாங்கள் ஊழியர்களுக்கு உதவி வருகிறோம்” என லேபர் கமிஷனர் பாலசந்திரன் கூறுகிறார்.

நிறுவனங்கள் தாங்கள் அரசு நிர்ணையித்த குறைந்தபட்ச ஊதியத்தை அளிப்பதாகவும். அதை என்றுமே மேலும் குறைப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றன.  திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தை சேர்ந்த சக்திவேல், “அரசு இன்னும் தெளிவாக, எந்த அறிவிப்பும் தரவில்லை.  திறமையான ஊழியர், மற்றும் சாதாரண ஊழியர் என்பதற்கான வரைமுறையை அரசு அறிவிக்கவில்லை” என்கிறார்.

உயர்நீதிமன்றத்தில் தனக்கு வரவேண்டிய ரூ. 5000க்கு காத்திருக்கும் ஒரு பெண், ”எனது கணவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதால், அவரும் பணி புரியவில்லை.  இந்த நிலையில் உணவுக்கும் வழியின்றி இருக்கிறேன்.  என்னைப் போல் பலர் உள்ளனர்.  நான் பணி புரிந்தே ஆகவேண்டும்.  இந்த பணம் கிடைத்தால் சிறிது நிம்மதி கிடைக்கும்” என கண்ணீர் மல்க கூறினார்.

ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு வந்த போது நிறுவனத்தினரால் அவர்கள் தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.  நீதிபதி அவர்களை கண்டித்து விட்டு, அவர்கள் கேட்ட கால அவகாசத்தை அளித்தார்.

நாம் குறிப்பிட்டதைப் போல் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கல் வேதனையில் வாடுகிறார்கள் என்பதே உண்மை நிலை.