டில்லி,
துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளரான நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்து வந்த வெங்கையா நாயுடு, இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
தேர்தலில் போட்டியிடுவதையொட்டி நேற்று மாலை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது துணைஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய துணைஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் இன்று ( ஜூலை 18)
தேர்தல் – வாக்குப்பதிவு: ஆகஸ்டு 5ந்தேதி நடைபெறுகிறது. அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரி இரண்டு முறை துணை ஜனாதிபதி பதவி வகித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட ஹமீத் அன்சாரி, மீண்டும் 2012ம் ஆண்டு துணைஜனதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.