என்னுயிர் “தோலா”: 5:    படர் தாமரை ஏற்படுவது ஏன்.. தடுப்பது எப்படி?
டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி.,

டர் தாமரை  – பெயர் அழகாகத்தான் இருக்கிறது.  ஆனால் படர்தாமரை  வந்தவர்கள் கதி? வெளியில் சொல்லவும் முடியாமல் பொது இடங்களில் சொரியவும்  முடியாமல் அவர்கள் படும்பாடு இருக்கிறதே, அது பட்டவர்களுக்குத்தான் புரியும்.

இந்த படர் தாமரை,  எந்த கிருமியால் வருகிறது?

இது ஒருவிதமான பூஞ்சான் தொற்று கிருமியால் (dermatophyte fungus)  வருகிறது.

காரணம் என்ன?

உடலில் வியர்வை தங்குவதாலும், இறுக்கமான காற்றோட்டம் இல்லாத ஆடை அணிவதாலும் இந்த கிருமி  வருகிறது.

வெப்ப மண்டல நாட்டில் வாழும் நமக்கு காற்றோட்டம் உள்ள ஆடையே நல்லது. அதுவும் உடை, மெலிதாக இருக்க வேண்டும். பாரம்பரிய வேட்டி அப்படிப்பட்டதுதான்.

ஆனால் நாம் வேட்டியை மறந்துவிட்டோம். கொளுத்தும் வெய்யிலில் டெனீம் ஜீன்ஸ் அணிகிறோம்.   அது மட்டுமா?  இறுக்கமான இடுப்பை கவ்விப் பிடிக்கும் பட்டை ஜட்டி, பனியன் அணிகிறோம். அதோடு இன்னும் இறுக்கமாக இன் செய்து கொள்கிறோம், இதில் இறுக்கும் பெரிய பெல்ட் வேறு!

ஆக.. கால் கவட்டிக்கு காற்று  செல்ல வாய்ப்பே இல்லை.  இதனால்தான் ஆண்களுக்கு நோய்த்தொற்று தாக்குகிறது. கவட்டியில் வரும் படர்தாமரை, கண்ட இடங்களுக்கும் பரவுகிறது.

இது ஒரு தொற்று நோய். ஆகவே ஒருவரிடமிருந்து பிறருக்கு பரவும் ஆபத்தும் உண்டு.

ஆண்களுக்கு கவட்டையில் ஆரம்பிக்கிறது. பெண்களுக்கு?

பெண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இடுப்பில் ஆரம்பித்து தொடை, மார்பு கீழ்பகுதி, அக்குள் பகுதிக்கு படர்தாமரை பரவுகிறது.

முன்பு பெண்களை இந்நோய் அதிகம் தாக்கியதில்லை.  ஆனால் சமீபகாலமாக அதிகமாக பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் “நாகரீகம்” என்ற பெயரில் பெண்கள் அணியும்  “லெகின்” ஆடையாகும். இந்த ஆடை உடலை இறுகக் கவ்விப்பிடிக்கிறது காற்று புக வழியில்லை.. தவிர வியர்வை வெளியேறவும் வாய்ப்பில்லை.

சரி, படர் தாமரை நோயை எப்படி கண்டுபிடிப்பது?

இது சிறிய வட்டமாக தொடை சந்தில் ஆரம்பமாகும்.  பின் பெரிய  பெரிய வட்டங்களாக பரவும். மருத்துவர் இதை எளிதில் கண்டு கொள்வார்.  சில சமயம் தோலை சுரண்டி மைக்ராஸ்கோப்பில் பூஞ்சை கிருமியை கண்டு உறுதிப்படுத்த வேண்டியிருக்கும்.

தற்போது அதிகமாக வர வேறு காரணம் உள்ளதா?

மருத்துவர் ஆலோசனை இன்றி, தாமாகவே மருந்து கடையில் ஏதாவது களிம்பு அல்லது மருந்துகளை வாங்கி தடவுவது முக்கிய காரணம்.   இவை அரிப்பை தற்காலிகமாக குறைக்கும்.  ஆனால் நாளடைவில் வியாதியின் தீவிரத்தை அதிகப்படுத்தும்.

இந்த படர்தாமரை, விரல் இடுக்கில்  சேற்றுப்புண்ணாகவும் வரும். இது இறுக்கமான ஷூ போடுபவருக்கும் தண்ணீரில் அடிக்கடி நனைபவர்களுக்கும் கால் விரல் இடுக்குகளில் வர வாய்ப்பு அதிகம்.

படர் தாமரைக்கான பூஞ்சை மற்ற இடங்களில் வர வாய்ப்பு உண்டா?

நிச்சயமாக உண்டு.   தலையில்  இந்த பாதிப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் வட்டமான வடிவில் அப்பகுதியில் மட்டும் முடி கொட்டும். இது போல தலையில் ஆங்காங்கே ஏற்படும்.  இந்த பகுதியில் தோல் உதிரவும் செய்யும்.  பொதுவாக இது சிறியவர்களுக்கே வரும்.

அதே போல நகத்தில் பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி வந்தால் நகத்தின்  நிறம் மாறி தடிமனாக உருக்குலைந்து வண்டு குடைந்த மாதிரி ஆகிவிடும்.  இது ஷூ போடுபவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம்.

தீர்வு என்ன?

படர்தாமரை ஆரம்ப கட்டத்தில் இருந்தால்.. அதாவது  ஒன்றிரண்டு  இடங்களில் சிறு வட்ட வடிவங்களில் இருந்தால், அதன் மேலே தடவும் விதமாக கிரீம் வகை மருந்துகளை மருத்துவர்கள் அளிப்பர்.  ( படர்தாமரையின் அறிகுறி மறைந்துவிட்டது என்றதும் மருந்து தடவுவதை விட்டு விடக்கூடாது. மேலும் இரு வாரங்கள் மருந்து தடவி வரவேண்டும். )

ஓரளவு அதிகமான பாதிப்பு இருந்தால், மருத்துவர், மாத்திரைகளை பரிந்துரைப்பார். (க்ரீம் வகை) மருந்து போலவேதான் மாத்திரையும். அதாவது படர்தாமரையின் அறிகுறி மறைந்துவிட்டாலும் மேலும் இரு வாரங்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வருமுன் காப்பது எப்படி?

1.    அதிகமாக வியர்த்தால் காலை மாலை இரு வேளையும் குளிக்கலாம்.

2.    உலர்வான சுத்தமான ஆடையை அணிய வேண்டும்.

3.    வெய்யில் காலத்தில் டெனீம் , லெகின்ஸ் அணிவதை தவிர்க்கலாம்.

3. “நண்பேண்டா” என்று அடுத்தவருது ஆடையை அணியக் கூடாது.  படை பரிசாக கிடைக்கக் கூடும்.

4. சட்டையை வெயிலில் உலர்த்த வேண்டும். நிழலில் உலர்த்தினால், அதில் சில பூஞ்சைகள் அப்படியே தங்கிவிடக்கூடும்.

5. இரவு நேரத்திலாவது உடலில் காற்றோட்டம் இல்லாத இடங்களை காற்றுபுகும்படியாக தளர்வான ஆடைகள் அணிய வேண்டும்.

6. மருத்தவரின் ஆலோசனை இன்றி தாங்களாக தேவையற்ற கிருமி நாசினி கொண்டெல்லாம் கழுவ வேண்டாம்.

7. மருந்து கடையில் ஸ்டீராய்டு உள்ள கிரீமை வாங்கி தடவக் கூடாது. ஏனென்றால் அரசால் தடை செய்யப்பட்ட சிலவகை க்ரீம்கள் மார்க்கெட்டில் உலவுகின்றன. ஆகவே மருத்துவரின் ஆலோசனை இன்றி க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவது தவறு.

அதுவும் தகுதியான மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் நோய் தீர்வதைவிட அதிகமாக வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

(தொடரும்)