நியூயார்க்

ந்திப் பாடல்கள் பாடாத சர்ச்சைக்குப் பின் மவுனமாக இருந்த எ ஆர் ரகுமான், நியூயார்க்கில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது எனக் கூறி உள்ளார்.

இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சிக்குப் பின் செய்திகளில் அதிகம் பேசப்பட்டார்.   மேடையில் தமிழ்ப் பாடல்கள் பாடியதாகக் கூறி இந்தி ரசிகர்கள் வெளியேறினர்.  டிவிட்டரிலும் முக நூலிலும்,  அவரை ஆதரித்தும் எதிருத்தும் ரசிகர்களின் கருத்துக்கள் அனல் பறந்தன.   ஆனால் இதுபற்றி இது வரை ரகுமான் எந்தக் கருத்தும் கூறவில்லை.

தற்போது ரகுமான் 18 ஆவது திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவுக்காக நியூயார்க் சென்றுள்ளார்.  அங்கு ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார்.  அதில் ஹரிஹரன், கைலாஷ் கேர், ஜொனிதா காந்தி, பென்னி தயோள், மிகா சிங், நீத்தி மோகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இதிலும் தமிழ்ப் பாடல்கள் சிலவற்றை பாடகர்கள் பாடினார்கள்.  அதிலும் ஊர்வசி ஊர்வசி என்னும் தமிழ்ப் பாடலை பாடும்படி ரசிகர்களே கேட்டு ரசித்ததுதான் ஹைலைட்டே..

நிகழ்ச்சி நடைபெற்ற மெட்லைஃப் ஸ்டேடியமே ரசிகர்களின் ஒன்ஸ் மோர் கூக்குரலால் அதிர்ந்தது.  நள்ளிரவைத் தாண்டி நடந்த நிகழ்ச்சி 2 மணி ஆகியும், ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை.  ”மிகவும் நேரம் ஆகிவிட்டது” என ரகுமான் கூறிய போதும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஹம்மா ஹம்மா என பாட நேர்ந்தது.

இந்த நிகழ்வு பற்றி ரகுமான், “ரசிகர்களின் ஆர்வத்துக்கிணங்க எனது மிகச் சிறந்த பெர்ஃபார்மன்ஸை நான் கொடுத்துள்ளேன். எனக்கு இன்னும் தங்கள் ஆதரவை அளித்து வரும் ரசிகர்களுக்கு எனது அன்பையும், நன்றியையும் காணிக்கையாக்குகிறேன்” என்று கூறினார்.

இதுவரை இந்திப்பாடல் பாடததற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்களுக்கு ஏதும் ரகுமான் பதில் அளிக்கவில்லை.