“பிக்பாஸ்” நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே சர்ச்சைகளும் ஆரம்பமாகிவிட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், சக போட்டியாளரான நடிகை ஓவியாவை ”சேரி பிகேவியர்” என்று கூறவே சாதிய ரீதியாக அவர் பேசியிருக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியது. சமூகவலைதளங்களில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் இதைக் கண்டித்து புகார் அளித்திருக்கின்றன.
இன்னொரு புறம், வேறுவிதமான விவகாரங்கள்..
நிகழ்ச்சி ஆரம்பித்த அன்றே சக போட்டியாளரான நடிகர் ஸ்ரீயிடம் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என கூறினார். இதுவும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ஜூலியை விமர்சித்து நெட்டிசன்கள் பதிவிட்டுத்தள்ளினார்கள்.
அடுத்து.. நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் நடிகைகள் ஆபாசமாக உடை அணிவதாக சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக நமீதா மீது!
இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்குகொண்டிருக்கும் வையாபுரி, கஞ்சா கறுப்பு, சினேகன் உள்ளிட்டோரே மிக மோசமாக – ஆபாசமாக கமெண்ட் அடித்தனர். இதுவும் பலத்த கண்டனத்துக்குள்ளானது.
தவிர.. சினேகனும் காயத்ரியும் பேசும்போது `ஓவியா கேமராவுல அப்படியும் இப்படியும் காமிக்கிறா. அதான் அவ்ளோ ஓட்டு விழுது’ என்றார்கள்.
இது நிகழ்ச்சி பார்ப்பவர்களையும் கேவலப்படுத்துவது போல் இருக்கிறது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் “பிக்பாஸ்’ நிகழ்ச்சி, பண்பாட்டைக் சீரழிக்கிறது. கலாசாரத்தைக் கெடுக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனைக் கைதுசெய்ய வேண்டும்’ எனறு இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது. கமல் வீட்டு முன் முற்றுகை போராட்டமும் நடத்தியது.
இந்த சர்ச்சைகள் குறித்து பதில் அளிக்க செய்தியாளர்களை சந்தித்தார் கமல்.
அப்போது அவர், “நான் நடித்த முத்தக்காட்சியால் கெடாத கலாசாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியால் கெட்டுவிடுமா?” என்று கேள்வி எழுப்பினார். “ என்னை கைது செய்தால் சட்டப்படி எதிர்கொள்வேன்” என்றார்.
அதோடு, “பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பதற்கு நான் பொறுப்பு கிடையாது” என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களிடம் நீண்ட நேரம் உரையாடினார் கமல்.
அவர்களிடம் பிடித்தவர், பிடிக்காதவர், பொய் சொல்லியிருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார்.
கடைசியில், “பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாக இருந்தாலும் வாழ்க்கைக்கு உதவக்கூடியது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வீரர்களை, போருக்கு தயார் செய்வதுபோலத்தான் பயிற்சி அளிப்பார்கள்.
அதுபோல பிக்பாஸ் போட்டி என்பது வாழ்க்கைப் போட்டியை எதிர்கொள்ள உதவும். போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல.. நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் உதவும்” என்றார்.
ஆனால் நெட்டிசன்களோ, “இந்த நிகழ்ச்சியே கலாச்சார சீரழிவு என்கிறோம். இது எங்களது வாழ்க்கைக்கு உதப்போகிறதா” என்று ஆத்திரத்துடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.