கொச்சி:
”தவறு செய்தவர்கள் தப்பிவிடக்கூடாது. கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நடிகர் திலீப் உள்ளிட்ட எவருடனும் எனக்கு எந்த தொழில் தொடர்பும் இல்லை,” என, நடிகை பாவனா தெரிவித்துள்ளார். நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
bhavana
இந்த வழக்கில் பிரபல கேரள நடிகர் திலீப், சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இது குறித்து நடிகை பாவனா தனது சகோதரர் ஜெயதேவ் பாலசந்திராவின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அன்பு நண்பர்களே… இந்த அறிக்கையை இப்படி வெளியிடுவதற்கு காரணம் உள்ளது. எனது எண்ணங்களை, டிவி அல்லது செய்தியாளர்கள் மூலம் பேட்டியாக தெரிவிக்கும் மன நிலையில் நான் இல்லை.
ஆகவே தான் இப்படி அறிக்கை வெளியிடுகிறேன். கடந்த பிப்., 17 ம் தேதி முதல் மறக்க முடியாத மற்றும் மிகவும் துரதிருஷ்டவசமான துயரத்தை கடந்து வந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் நேர்மையான முறையில், இது குறித்து நான் காவல்துறையில் புகார் அளித்தேன். அந்த வழக்கு விசாரணையும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வழக்கில் சமீபத்தில் நடந்த சில கைது நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மற்றவர்களை போல எனக்கும் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளன. எந்த சூழ்நிலையிலும், எவரையும் நான் சந்தேகப்படும் நபர் என்று சுட்டிக் காட்டவில்லை.
அதே போல் எவர் மீதும் எனக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை. யார் பெயரையும் நான் வெளிப்படுத்தவில்லை. இதை நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளேன். கடந்த காலங்களில் அந்த நடிகருடன் (திலீப்) பல படங்களில் நடித்து இருக்கிறேன்.
ஆனால், ஒரு கட்டத்தில் எங்களிடையே தனிப்பட்ட முறையில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. ஆகவே ஆகவே நட்பு உறவில் இருந்து பிரிந்து விட்டோம். அந்த நடிகர் கைது குறித்த தகவல்களை, மீடியா மூலமும், நண்பர்கள் வட்டாரங்கள் மூலம் திரட்டிய போது, அவர் தவறு செய்து இருக்கிறார் என்பதற்கான போதிய ஆதாரங்களை காவல்துறையினர் திரட்டி உள்ளனர் என்பது எங்களுக்கு தெரிய வந்தது. தான் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நடிகர் கூறுகிறார்.
அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், எத்தனை விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் அவரது குற்றமற்றதன்மைக்கான தகவல்கள் வெளி வரட்டும். அப்படி இல்லாவிட்டால் அவரது தவறான செயல்களின் தகவல்கள் வெளியே வரட்டும். சட்டத்தின் கண்கள் முன் அனைவரும் சமமே. .
குற்றம் இழைக்காத ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது. அதே போல், எந்த ஒரு கிரிமினலும் தப்பி விட கூடாது. நான் அந்த நடிகருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் உட்பட சில தொழில்களில் ஈடுப்டதாக தகவல் வெளியாகி வருகிறது. அது தவறு. எங்களிடையே அது போன்ற வியாபார தொடர்புகள் எதுவும் கிடையாது. முதலில் இந்த தகவல் வெளியான போது, சிறிதளவு கூட உண்மை இல்லாத அந்த தகவல் விரைவில் மறைந்து விடும் என்றே நினைத்தேன்.
ஆனால், தொழில் தொடர்புகள் குறித்த தகவல் மீண்டும், மீண்டும் ஊடகங்களில் வெளி வருவதால், இந்த விளக்கத்தை கொடுக்க விரும்பினேன். தேவைப்பட்டால் விசாரணை அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்பிக்க தயாராக இருக்கிறேன். அதே போல், இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு போலீசாருக்கு நான் நன்றி தெரிவிப்பது போல சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ள வீடியோ போலியானது என்பதையும் தெரிவிக்கிறேன்.
இது போன்ற செயல்கள் மக்கள் மற்றும் மீடியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அதில் இருந்து விலகி இருக்கும்படி எனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளேன். அனைவரும் இந்த நாட்டின் சட்டத்தின் கீழ் தான் இருக்கிறோம். குற்றம் இழைக்காத ஒருவர் தண்டிக்கப்பட கூடாது; எந்த ஒரு கிரிமினலும் தப்பி விட கூடாது என நான் மீண்டும் தெரிவிக்கிறேன்.
உங்களின் அளவிடமுடியாத அன்பு மற்றும் ஆதரவுக்கு ஏராளமான பிராத்தனைகளுடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு தனது அறிக்கையில் நடிகை பாவனா தெரவித்துள்ளார்.