டில்லி

செல்லாதவை என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருப்பதாகவும், அதனால் மாற்றப்பட்ட பணம் எவ்வளவு என இன்னும் துல்லியமாக சொல்லப்பட இயலவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதித்துறைக்கான நாடாளுமன்றக் குழுக்கூட்டம் வீரப்பமொய்லி தலைமையில் நடைபெற்றது. இதில் கேள்விகளுக்கு பதிலளிக்க ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கலந்துக் கொண்டார்.  அவருடன், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களான முந்த்ரா, விஸ்வநாதன், கனுங்கோ ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.   இதற்கு முன்பு ஜனவரி மாதம் நிகழ்ந்த கூட்டத்திலும் அவர் கலந்துக் கொண்டது தெரிந்ததே.

கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் ”ரூ.500 மற்றும் ஆயிரம் நோட்டுகள் இன்னும் எண்ணப்பட்டு வருகிறது.  இதற்காக ஏற்கனவே உள்ள பணம் எண்ணும் 57 இயந்திரங்களும் இரவல் வாங்கப்பட்டுள்ள ஏழு இயந்திரங்களும் போதாததால் மேலும் வாங்க டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.  ஊழியர்கள் இரவும் பகலுமாக எண்ணி வருகின்றனர்” எனக் கூறினார்.

இந்த பதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிருப்தியை அளித்தது.  திக்விஜய் சிங், “அநேகமாக மே 2019க்குள்ளாவது எண்ணுவது முடிந்து விடுமா?” எனக்கேட்டது எதிர்க்கட்சி உறுப்பினர்களை சிரிக்க வைத்தது. (மே 2019 உடன் மோடியின் அரசு பதவி ஏற்று 5 வருடங்கள் முடிந்து விடும் என்பதே காரணம்)

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நரேஷ் அகர்வால் ரிசர்வ் வங்கி கவர்னர் சரியான பதில் அளிக்காத நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதே தேவையற்றது எனக்கூறி வெளியேறி விட்டார்.

ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் ரூ 500 நோட்டில் உள்ள ப்ரிண்ட் செய்யப்பட்ட வருடத்தை காட்டி, இதே போல் ஏன் எக்ஸ்பைரி டேட்டும் ப்ரிண்ட் செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி கவர்னரிடம் கேள்வி எழுப்பினார்.  அதற்கும் விடை இல்லை.

குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் படேல் சரிவர பதில் அளிப்பதில்லை எனவும், அளிக்கும் பதில்களும் ஏனோ தானோ என இருப்பதாகவும் கருதுகின்றனர்.  இதுவரை செல்லாத நோட்டுக்கள் எவ்வளவு திரும்பப் பெறப்பட்டது என்பதை இன்னும் துல்லியமாக ரிசர்வ் வங்கி சொல்லாதது அனைவருக்கும் அதிருப்தி அளித்துள்ளது.   அதனால் இனி படேலை கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் டிரான்சாக்‌ஷன் பற்றியும் விவாதிக்கப்பட்டது.  எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அமைச்சர் அர்ஜுன்ராஜ் மொபைல் ஃபோனில் சிக்னல் கிடைக்காமல் மரத்தில் ஏறி பேசிய புகைப்படத்தை காட்டி, இது போல சூழ்நிலையில் கிராமவாசிகளால் எப்படி ஆன்லைன் டிரான்சாக்‌ஷன் செய்ய முடியும் என வினவினார்.

திக்விஜய் சிங் உட்பட பல உறுப்பினர்கள் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததால் அரசு சொன்னபடி, கருப்புப்பணம் ஒழிப்பு, போலி நோட்டுகள் ஒழிப்பு, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது ஆகிய எதுவும் நிகழவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலில் உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கு மூன்று கேள்விகள் கேட்கவேண்டும் எனவும் அதற்கு படேல் பதில் அளிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.  ஆனால் அனைத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் பல கேள்விகளை கேட்டதால் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்ட பின் படேல் தன் பதிலை அளிப்பார் என பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே அறிவித்தார்.  அதன்படி அனைவரும் கேள்விகளை எழுப்பினார்கள்.   ஆனால் படேல் பல கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை.

அடுத்த வாரம் துவங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்காலத் தொடரில் இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிகிறது.