சென்னை,
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
விடியவிடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இன்று காலையும் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தற்போது சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உத்தரமேரூர், வாலாஜா பாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீ பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்