மூவருக்கும் கிரண்பேடி பதவி
பிரமாணம் செய்து வைத்த போது..

புதுச்சேரி:

புதுவையில் பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆளும்  அரசு சிபாரிசின் பேரில் தான் மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது வழக்கமாகும்.  ஆனால் மத்திய அரசே தன்னிச்சையாக 3 பேரை நியமித்து. புதுவை பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரே அந்த மூவர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு புதுவை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்  மத்திய அரசின் நடவடிக்கையை  கண்டித்து முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள்  நடந்தன.

கடிதம்

இதற்கிடையே சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரும் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து தங்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கோரினர்.

அதற்கு சபாநாயகர் இது சம்பந்தமாக மேலும் சில ஆவணங்கள் வேண்டும் என்றார்.  இதனால் பதவி ஏற்பு காலதாமதமானது. அன்று இரவே கிரண்பேடி அவர்கள் மூவரையும்  அலுவலகத்துக்கு அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.   இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிறகு மூவரும் பேரும் புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரை சந்தித்து, தாங்கள் மூவரும் கவர்னர் மூலம் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுள்ளதாகவும், தங்களை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரித்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கடிதம் அளித்தனர்.

இந்த நிலையில் கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸூம், சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் மூலம் சபாநாயகருக்கு  இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தை வின்சென்ட் ராயர் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களை படித்து பார்த்தார்.

பிறகு கவர்னரின் கடிதத்தை ஏற்க முடியாது என்று கூறி அதை திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், “நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மூவரும் என்னிடம் மத்திய அரசு கடிதத்தை காண்பித்தார்கள். அதில் 3 பேர் பெயர் மட்டும் தான் இருந்தது. அவருடைய தந்தை பெயர் முகவரி போன்ற எந்த விவரங்களும் இல்லை. எனவே முழு தகவல்கள் அடங்கிய உத்தரவு இருந்தால் தான் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும்” என்றும் தெரிவித்தார்.  அதோடு, “மூவரும் பேர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு எதுவும் சபாநாயகர் அலுவலகத்துக்கு நியமிக்கும் அதிகாரம் உள்ள உரிய நபர்களிடம் இருந்து உத்தரவு வரவில்லை. ஆகவே நான் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை.

ஆனால் நீங்கள் (கவர்னர்) அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து இருக்கிறீர்கள். சபாநாயகர் இருக்கும் போது, அவர்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரையும் மீறி கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது.

தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படும் நபருக்கு மட்டுமே எம்.எல்.ஏ. பதவி பிரமாணத்தை செய்து வைக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு. .

மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தான் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

ஆகவே நீங்கள் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது. நான் அவர்களை எம்.எல்.ஏ. வாக பணியாற்ற அனுமதிக்க முடியாது” என்று சபாநாயகர் வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முதலியார் பேட்டையைச் சேர்ந்த செல்வகணபதி என்பவர், “நியமன எம்.எல்.ஏக்களுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில் மூவரின் பெயர் மட்டுமே உள்ளது. வேறு விபரங்கள் இல்லை. அதில் ஒரு பெயர் செல்வகணபதி. நான் நீண்ட காலமாக பொது சேவையில் ஈடுபட்டுள்ளதால் என்னைத்தான் நியமன எம்.எல்.ஏ.வாக நியமித்து உத்தரவிட்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஆகவே எனது சந்தேகத்தை தீர்த்துவைத்து, அந்த பதவி எனக்கு அளிக்கப்பட்டிருந்தால் என்னை அழைத்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி கோருகிறேன். என் சந்தேகத்தை தீர்க்காமல்  பெயரில் உள்ள வேறு யாருக்கும் பதவிப்பிரமாண் செய்துவைக்கக்கூடாது” என்று சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்த கடிதம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.