டில்லி
கடந்த வார இறுதியில் டில்லியில் நடைபெற்ற சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் வாட்ஸ்அப் மூலம் விடைகளை பெற்று அதை காப்பி அடித்து எழுதியதாக நால்வரை போலிஸ் பிடித்துள்ளது.
சிறு சிறு தாள்களில் பதிலை எழுதி வைத்துக் கொண்டு தேர்வில் காப்பி அடிப்பது அந்தக் கால மாணவர் வழக்கம். இப்போது டெக்னாலஜி முன்னேறி விட்டது. தேர்வில் மாணவர்கள் வாட்ஸ்அப் மூலம் விடைகளை பெற்று அதனை காப்பி அடித்து எழுதும் காலம் ஆகிவிட்டது.
கடந்த வார இறுதியில் இது போன்று நான்கு பேர் போலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வு அறைக்கு இரண்டு மொபைல் எடுத்துச் செல்கின்றனர். மொபைல் ஃபோன்களை கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தவுடன் ஒரு மொபைலை கொடுத்து விட்டு மற்றொன்றை மறைத்து வைத்துக் கொள்கிறார்கள். மற்றொரு மொபைல் மூலம் கேள்வித்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் நண்பருக்கு அனுப்பி விடுகிறார்கள். நண்பர் அந்தக் கேள்வித்தாளை பிரிண்ட் எடுத்து அதில் பதில்களை குறித்து புகைப்படம் எடுத்து திரும்ப அனுப்பி விடுகிறார். அதைப் பார்த்து மாணவர்கள் இங்கு பதில் அளித்து விடுகிறார்கள்.
பிடிபட்ட மாணவர்கள் தங்களது விடைத்தாளை பின்னால் சரிபார்க்க வசதியாக புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் ஒரு மாணவரிடம் கிடைத்த புகைப்படத்தில் ஆங்கிலத்தில் ALL THE BEST என எழுதி இருந்தது. மற்ற மாணவர்கள் முழுமையாக விடையளிக்கவில்லை. ஆனால் அவர்களிடமிருந்த புகைப்படத்தில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் நால்வர் மேலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பிடிபட்ட நான்கு பேரும் தங்களுக்கு விடை அனுப்பியது யார் என கூற மறுத்து விட்டனர். அது மட்டுமின்றி விடைகள் துல்லியமாக சரியாக இருப்பதால் அனுப்பியவர்கள் நிச்சயமாக ஆசிரியராக இருக்ககூடும் என்னும் பார்வையில் மேலும் விசாரணை நடைபெறுகிறது