டெல்லி:
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பண டெபாசிட் குறைந்து விட்டது என பிரதமர் மோடி பேசினார்.
சார்ட்ர்டு அக்கவுன்டன்ட்டுகள் நிறுவன தின விழா டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘இந்திய பொருளாதாரத்தின் தூண்கள் தான் சார்ட்ர்டு அக்கவுன்டன்டுகள். இந்த நாடும் முன்னேற்றபாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தான் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. நிறைவேற ஆதரவு தெரிவித்த உங்களுக்கும் எனது நன்றி. வரி விதிப்பை சார்ந்து தான் நம் நாடு உள்ளது. இந்த வரி விதிப்பை சீர்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் ’’ என்றார்.
மேலும், அவர் பேசுகையில், ‘‘நாட்டில் ஊழலை ஒழித்துக்கட்ட மிகப்பெரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு மேற்கொண்ட முதல் முயற்சி தான் பணமதிப்பிழப்பு. இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்பு பண பதுக்கியதன் அளவு குறைந்துவிட்டது.
ஜி.எஸ்.டி. வாயிலாக நாட்டின் பொருளாதாரம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இனி இந்தியாவில் யாரும் வரி ஏய்ப்பு செய்ய முடியாது’’ என்றார். மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உள்பட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.