மீரட்:
உ.பி. மாநிலத்தில் தன் தாய் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாருக்கு லஞ்சமாக தன் உண்டியல் பணத்தை தர முன் வந்த 6 வயது சிறுமியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி., மாநிலம், மீரட் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சீமா கவுசிக். கணவர் வரதட்சணை கேட்ட கொடுமை செய்ததால் சீமா கடந்த ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான கணவர் சஞ்சீவ் குமார், அவரது தந்தை மற்றும் 2 சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமாவின் தந்தை சாந்தி ஸ்வரூப் போலீசில் புகார் கொடுத்தார்.
ஆனால் போலீசார் சஞ்சீவ் குமாரை மட்டும் கைது செய்தனர். உறவினர்களை கைது செய்ய போலீசார் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். இந்த சூழ்நிலையில், சீமாவின் 6 வயது மகள் மான்வியா மீரட் போலீஸ் ஐ.ஜி., ராம்குமார் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த உண்டியலுடன் வந்தார்.
இதை கண்ட ஐ.ஜி. அச்சிறுமியை அழைத்து விசாரித்தார். அதற்கு சிறுமி மான்வி, ‘‘என் தாய் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் லஞ்சம் கேட்டனர். அதனால் என் உண்டியல் பணத்தை லஞ்சமாக எடுத்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று மழலை குரலில் கூறினார்.
இதை கேட்டு அதிர்ந்து போன ஐ.ஜி. கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சிறுமியை அனுப்பி வைத்தார். மேலும், லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி உத்தரவிட்டுள்ளதார்.