க்ரா

க்ராவை சேர்ந்த ஆர்த்தி ஷர்மா என்பவர் தன் நான்கு குழந்தைகளின் கல்விக்காக தன் கிட்னியை விற்பதாக அறிவித்ததை அறிந்த கேரள மக்கள் அக்குடும்பத்துக்கு பண உதவி செய்துள்ளனர்

ஆக்ராவை சேர்ந்தவர் ஆர்த்தி ஷர்மா.  இவர் தன் கணவர், மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.  இவர் கணவர் நடத்தி வந்த வியாபாரம் நொடித்துப் போய் அவர் ரூ 5000 மாதச்சம்பளத்துக்கு ஓட்டுனர் பணி செய்து வருகிறார்.  அவர்களால் தங்களின் வீட்டுக்கு வாடகையும் செலுத்த முடியாமல் எந்த நிமிடத்திலும் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். அவரது நான்கு குழந்தைகளின் கல்விச் செலவு வேறு.

 

குடும்பத்தினருடன் ஆர்த்தி சர்மா

இந்நிலையில் ஆர்த்தி முதல்வரின் அரசுத்திட்டத்தின் மூலம் தன் குழந்தைகளின் கல்விக்கு உதவி கேட்டிருந்தார்.  ஆனால் அந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.   செய்வதறியாது தவித்த ஆர்த்தி,  முகநூலில் சகயோக சங்கேதன் என்னும் பக்கத்தில் தனது சிறுநீரகத்தை குழந்தைகளின் கல்விக்காக நல்ல விலை வந்தால் விற்கத்தயார் எனவும் தனது ரத்த குரூப் B+ எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்தி பல ஊடகங்களில் வெளியானது.  இதை கேரளாவின் தாலிபரம்புரா தொகுதி எம் எல் ஏ ஜேம்ஸும் இந்த விசயத்தை அறிந்தார். அந்த ஏழைக் குடும்பத்துக்கு உதவும் பொருட்டு தனது தொகுதியில்  உள்ள 222 பள்ளிகளில் நிதியுதவி உண்டியலை அமைத்தார்.  அது மட்டுமின்றி ஆர்த்தி விரும்பினால் அவர் குழந்தைகளுக்கு கேரளாவில் கல்வி அளிக்க ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.

மொத்தம் இருபது லட்சத்து ஐயாயிரம் ரூபாய் வசூல் ஆனது.  இது ஆசிரியர்கள் ரவி மற்றும் ஜனார்த்தனன் மூலமாக ஆர்த்தியின் குடும்பத்தாரிடம் அளிக்கப்பட்டது.  இதனை அனைத்து மாணவர்களும் தொலைக்காட்சி மூலம் கண்டனர்.

இந்த உதவியினால் மனம் நெகிழ்ந்த ஆர்த்தி,  ஆசிரியர்களின் சொல்படி தனது குழந்தைகளுக்கு கேரளாவில் கல்வி அளிக்க அழைத்து வர தயார் என ஒப்புதல் தெரிவித்துள்ளார்.    உதவி கேட்டு தாம் அலுத்துப்போன இந்த நிலையில் தான் தனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்ததாகவும், தற்போது இந்த உதவியினால் தாம் மனம் மகிழ்ந்துள்ளதாகவும், மனித நேயம் என்றும் சாகாது எனவும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

காலில் இருக்கும் விரலில் அடிபட்டால் கண்ணில் இருந்து கண்ணீர் வரும் என தமிழ்மொழியில் சொல்லப்படும் ஒரு சொல் தற்போது நம் நினைவுக்கு வருகிறது.