கொச்சி

காங் எம் எல் ஏ ரோஜி ஜான், கொச்சி மெட்ரோவில் பயணம் செய்த ஒரு உடல்நலமில்லாதவரை குடிகாரர் என  தானும் பகிர்ந்தமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது:

கொச்சியில் மெட்ரோ சேவை கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளது.  அதில் ஒருவர் படுத்து உறங்குவது போல் ஒரு படம் சமூக வலைதளங்களில் கொச்சி மெட்ரோவில் ஒரு குடிகாரர் என்னும் தலைப்பில் வெளியாகி வைரலாக பரவத் தொடங்கியது.   அதை பகிர்ந்தவர்களில் கேரளா காங் எம் எல் ஏ ரோஜி ஜானும் ஒருவர்.

அந்தப் புகைப்படத்தில் உள்ளவர் பெயர் எல்டோ.  அவருடைய சகோதரர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொச்சி மருத்தவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.  அவரைக் காண தன் மனைவி, மற்றும் குழந்தைகளுடன் கொச்சி வந்தார்.   சகோதரரின் நிலையைக் கண்டு மனவேதனையுற்றார்.  இந்நிலையில் அவரது மகன் மெட்ரோவில் பயணம் செய்ய ஆசைப்பட்டு மிகவும் வற்புறுத்தியதால் அவர் தன் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார்.

உடல் களைப்பு மற்றும் மனச்சோர்வு காரணமாக அவரால் அமர முடியாமல்  அந்த இருக்கையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.   அப்பொழுது யாரோ ஒருவர்  புகைப்படம் எடுத்து அதனை கொச்சி மெட்ரோவின் முதல் குடிகார பயணி என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.  உண்மை அறியாத பலரும் இதனை வெளியிட இந்தப் புகைப்படம் வைரலாக பரவியது.

இதனை அறியாமல் தானும் பதிந்ததாகவும்,  தற்போது எல்டோ மூலமே உண்மையை அறிந்ததால் தன் செயலுக்கு மிகுந்த வருத்தம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

எல்டோவின் உறவினர் ஒருவர், எல்டோவிடம் பணம் இல்லாததால் இது குறித்து யார் மீதும் வழக்கு தொடுக்கமுடியவில்லை என்றும்,  இதனால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை யாராலும் போக்க முடியாது எனவும் கூறினார்.

ஏழைகளால் மனவருத்தம் அடைவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது என்பதே கண்கூடான உண்மை.