
டில்லி,
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் அடுத்தமாதம் 17ம் தேதி நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் 24ந்தேதியுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் 14ந்தேதியே தொடங்கிவிட்டது.
இதையடுத்து, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முதலாவதாக, தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது.
தலித்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டை சுமந்துகொண்டிருக்கும் பா.ஜ.க., அந்த பழியைத் துடைத்தெறிய தலித் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை களமிறக்கி உள்ளது.
அதன் திட்டம் பலித்திருப்பதாகவே தோன்றுகிறது. பாஜகவுக்கு எதிராக முழங்கும் உ.பி.யின் மாயாவதி, தற்போது பாஜக வேட்பாளரை ஆதரித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் முகம் திருப்பிய பாஜகவின் தோழமைக் கட்சியான மகராஷ்டிராவின் சிவசேனா, இப்போது பாஜக வேட்பாளரை ஆதரிக்க தயாராகிவிட்டது.
எதிர்க்கட்சிகள், தங்கள் தரப்பு வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தனது வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாகவே 48.9 சதவிகித வாக்குகளை சேமித்து வைத்திருந்தது.
ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் புதிதாக சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து, இந்த ஆதரவு சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதில் அ.இ.அ.அதி.மு.க, பி.ஜே.டி, டி.ஆர்.எஸ், ஒய்.எஸ்.ஆர்(காங்கிரஸ்) ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் என்பது 60.81-ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர சமாஜ்வாதி, ஜனதா தளம், ஆகிய கட்சிகளும் ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் 65 % வாக்குகள் ராம்நாத் கோவிந்த்துக்கு கிடைக்கும்.
ஆக ராம்நாத் கோவிந்த் எளிதாக வெற்றி பெறுவார் என்பதே தற்போது உள்ள நிலை.
[youtube-feed feed=1]