பர்மிங்காம்,
இங்கிலாந்தில் நடந்து வரும் 8–வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற இருக்கும் அரை இறுதி போட்டியில் வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா.
பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2–வது அரைஇறுதியில், ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியா, ‘ஏ’ பிரிவில் 2–வது இடத்தை பெற்ற வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, 18ந்தேதி நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் , ரோகித் சர்மா ஆகியோரிடன் ஆட்டம் சிறப்பாக இருந்தால் வங்கதேசத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். ஏனெனில் இந்திய அணி பந்து வீச்சை விட பேட்டிங்கை தான் அதிகம் நம்பி இருக்கிறது.
2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வங்காளதேசம் முதல் முறையாக கால்இறுதிக்கு வந்த போது அவர்களை இந்திய அணி விரட்டியடித்தது. அந்த தோல்விக்கு இப்போது வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
களத்தில் இறங்கும் வீரர்கள் விவரம்:–
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, புவனேஷ்வர்குமார்.
வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்–ஹசன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், தஸ்கின் அகமது, மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.
இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு போட்டி தொடங்கும்.
போட்டி துளிகள்…
இன்றைய போட்டி, இந்திய பேட்ஸ்மேன் 35 வயதான யுவராஜ்சிங்குக்கு 300–வது ஒரு நாள் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 5–வது இந்தியர் யுவராஜ் ஆவார். யுவராஜ்சிங் இதுவரை 299 ஆட்டத்தில் பங்கேற்று 14 சதங்கள் உள்பட 8,622 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலியும் அடுத்த சாதனை நிகழ்த்த ரெடியாக இருக்கிறார். அவர் இன்னும் 88 ரன்கள் சேர்த்தால் ஒரு நாள்போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 8–வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.
இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்த்தி இந்தியா வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் கோப்பையில் 4–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். வேறு எந்த அணியும் 3 முறைக்கு மேல் இறுதிசுற்றை எட்டியது கிடையாது என்பது வரலாறு.
இந்தியாவும், வங்காளதேசமும் இதுவரை 32 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 26–ல் இந்தியாவும், 5–ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
ஏற்கனவே அரை இறுதி போட்டியில் வங்கதேசத்துடன் இந்தியா மோதுவதை விமர்சித்து வங்காளதேச ரசிகர் ஒருவர் வெளியிட்ட, வங்காளதேச கொடி போர்த்திய புலி ஒன்று, இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்ட நாயை விரட்டுவது போன்று சித்தரித்து அந்த ரசிகர் வெளியிட்ட கிராபிக்ஸ் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, இந்தியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
நமது தேசிய கொடியை அவமதித்த வங்காளதேச அணியினரை நமது அணியினர் மூக்குடைத்து அனுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவுக்கு எதிராக அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாடுமாறு வங்காளதேச வீரர்களை அந்த அணியின் பயிற்சியாளர் ஹதுருசிங்கே அறிவுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக இன்றைய போட்டி இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.