டெல்லி:
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் டி வில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இன்று காலை ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ் மேன்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.
இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடம் வகிக்கிறார். 862 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடம் பெற்றுள்ளார். 861 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2ம் இடம் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு டி வில்லியர்ஸ் தள்ளப்பட்டுள்ளார். ஷிகர் தவான் 746 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் 732 புள்ளிகளுடன் நீடிக்கிறார். 2ம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தஹீர் 718 புள்ளிகளுடன் உள்ளார். முதல் 10 இடங்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை.
டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் 2 இடங்களையும் இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர். ஜடேஜா 898 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அஷ்வின் 865 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களுக்குள் இவர்கள் இருவரை தவிர வேறு எந்த இந்திய பந்து வீச்சாளர்களும் இல்லை.