திருவனந்தபுரம்:

மாட்டு இறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு கேரளா அரசும், எதிர்கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பரவலாக மாட்டு இறைச்சி உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இச்சட்டம் தொடர்பாக விவாதிக்க கேரளா சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சட்டமன்ற கேண்டீனில் மாட்டு இறைச்சி வருவல் விற்பனை சக்கப் போடு போட் டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களது காலை உணவாக மாட்டு இறைச்சியை விரும்பி சாப்பிட்டனர்.
வழக்கமாக சட்டமன்ற கூட்டங்களின் போது பிற்பகல் 11 மணி முதல் தான் கேண்டீனில் மாட்டு இறைச்சி உணவு தயாராகும். ஆனால், இன்றைய கூட்டத்திற்கு முன்கூட்டியே மாட்டு இறைச்சி வருவல் தயார் செய்யப்பட்டது.

இது குறித்து கேண்டீன் ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘மாட்டு இறைச்சி தொடர்பான விவாதம் நடப்பதால் அதிகாலையிலேயே 10 கிலோ மாட்டு இறைச்சி வாங்கி வந்து சமைத்துவிட்டோம். அதனால் எம்எல்ஏ.க்கள் பலர் மாட்டு இறைச்சி வருவலை சாப்பிட்டுவிட்டு சட்டமன்ற கூட்டத்திற்கு சென்றனர்’’ என்றார்.

‘‘தேவிகுளம் சிபிஐ&எம் எம்எல்ஏ ராஜேந்திரன் முதல் ஆளாக வந்து மாட்டு இறைச்சி சாப்பிட்டார்’’ என்று கேண்டீன் உதவியாளர் தெரிவித்தார்.

மத்திய அரசின் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான தீர்மானத்தை முதல்வர் பினராய் விஜயன் தாக்கல் செய்து பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘இந்த புதிய சட்டம் தனி நபர் விரும்பிய உணவு சாப்பிடும் உரிமைக்கு எதிரானதாகும். மத்திய அரசின் இந்த உத்தரவு மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விவசாய சமுதாயத்தை பாதிக்கும்.

பால் நின்ற ஒரு மாட்டை பராமரிக்க ரூ. 40 ஆயிரம் தேவைப்படும். அதனால் அதை பராமரிப்பது கடினம். அதோடு நமது சமுதாயத்தில் பெரும்பான்மையானர்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். அதனால் எந்த கோணத்திலும் இச்சட்டத்தை ஏற்க முடியாது’’ என்றார்.

முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பேசுகையில்,‘‘ ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் சென்றபோது மாட்டு இறைச்சி சாப்பிட்டார். எப்போதாவது நாடு திரும்பும் அவர் மாட்டு இறைச்சிக்கு எதிராக பேசி வருகிறார். கேரளா சட்டமன்றத்தில் உள்ள ஒரே ஒரு பாஜ உறுப்பினர் ராஜகோபால் மக்களின் உணர்வு குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூற வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘ மாடு பாதுகாப்பு குறித்து அடிப்படை தெரியாதவர்கள் இச்சட்டத்தை வடிவமைததுள்ளனர். அதானி, அம்பான போன்றவர்கள் மாட்டு இறைச்சி வர்த்தகம் மேற்கொள்வதற்காக இ ச்சட்டம் கொண்டு வரப்படுகிறது’’ என்றார்.