டெல்லி:
டெல்லியில் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பு அளவு அதிகரித்துள்ளதோடு, மோசமான போக்குவரத்து நெரிசலிலும் டெல்லி சிக்கி தவிக்கிறது.
டெல்லி மாநில போக்குவரத்து துறை புள்ளி விபரங்களில் கூறியிருப்பதாவது:
ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் ஒரு கோடியே 5 லட்சத்து 67 ஆயிரத்து 712 வாகனங்கள் கடந்த மாதம் 25ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 31 லட்சத்து 72 ஆயிரத்து 842 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் 66 லட்சத்து 48 ஆயிரத்து 730 என பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை தான் சுற்றுசூழல் பாதிப்புக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
சரக்கு வாகனங்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 438, மோட்டார் கேப்ஸ் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 424, 3 சக்கர பயணிகள் வாகனம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 82, 3 சக்கர சரக்கு வாகனங்கள் 68 ஆயிரத்து 692, பஸ் 35 ஆயிரத்து 332, இ.ரிக்ஷா 31 ஆயிரத்து 555, மேக்சி கேப்ஸ் 30 ஆயிரத்து 207 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் சுற்றுசூழல் பாதித்து வருவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்று 15 ஆண்டுகளுக்கு முந்தைய தனியார் கார்கள், பைக்குகள், வர்த்தக வாகனங்கள், பஸ்கள், டிரக்குகளுக்கு தடை விதித்தது.
டெல்லியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மாசு கட்டுப்பாடு வாரிய சான்றிதழ் இல்லாமல் இயங்கி வருகிறது என சுற்று சூழல் மாசு மற்றும் கட்டுப்பாடு ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த விதி மீறலால் லட்சகணக்கான மக்களின் சுகாதாரத்தை பாதித்து வருகிறது. நகரில் உள்ள 70 லட்சம் வாகனங்களில் பரிசோதனை செய்ய 970 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆணைய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.