சென்னை:
மாடு விற்கவும், வாங்கவும் மத்திய அரசு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள £வில் மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை ஐஐடியில் மாட்டு இறைச்சி திருவிழா நேற்று நடந்தது.
நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் இந்த விழா நடந்ததை சென்னை ஐஐடி மாணவர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வளைதளங்கில் பரவி வருகிறது. அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் மாட்டு இறைச்சியை ரொட்டியுடன் இணைத்து சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மிருக வதை சட்டப்படி கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சென்னை ஐஐடி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வார காலமாக ஐஐடி.க்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக பிரிவும் மூடப்பட்டிருப்பதால் சரியான தகவல் தெரியவில்லை’’ என்றார்.
மாட்டு இறைச்சி சாப்பிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், இதை கோட்டூர்புரம் போலீசார் மறுத்தனர். இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை அன்று கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாட்டு இறைச்சி திருவிழா நடந்தது. இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு இந்த விழாவை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளது.