டெல்லி:

டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஆசிப் (வயது 21) என்பவரை முகமது ரபி, ஆகாஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர்.

ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் ஆசிப்பை உயிரோடு விடுவோம் என்று கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோரை போனில் மிரட்டியுள்ளனர். அவர்களும் பணத்தை கொடுத்து மகனை மீட்க முதலில் முடிவு செய்தனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசாரும் கடத்தல்காரர்கள் சொன்ன இடத்துக்கு பணத்தை கொண்டு செல்லுமாறும், தாங்கள் பின் தொடர்ந்து வருவதாகவும் கூறினர். இதை தொடர்ந்து ஆசிப்பின் சகோதரர் பலக் ஆலமும், அவரது மனைவி ஆயிஷாவும் பணத்துடன் சென்றனர். கடத்தல்காரர்கள் சொன்ன இடத்துக்கு இருவரும் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஆயிஷா தன் கை பையில் இருந்த துப்பாக்கியால் கடத்தல்காரர்கள் இருவரையும் சரமாரியாக சுட்டார்.

இதில் ஒருவனுக்கு இடுப்பு பகுதியிலும், மற்றொருவனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. கடத்தல்காரர்களை சுட்டு தனது கொழுந்தனை ஆயிஷா மீட்டார். குண்டு காயம் அடைந்த கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓட முடியவில்லை. பின்னால் வந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

ஆயிஷா தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீராங்கணை. இவர் பல்வேறு போட்டியில் பங்கேற்று தற்போது பயிற்சியாளராக உள்ளார். அவர் துணிச்சலாக செயல்பட்டு தனது கொழுந்தனாரை கடத்தல்காரர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார்.

ஆயிஷா கையில் வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸ் இணை கமி‌ஷனர் ரவிந்திர யாதவ் கூறுகையில், ‘‘ இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. தற்காப்பு க்காகவும், ஆசிப் உயிரை காப்பாற்றவும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர் தைரியமாக செயல்பட்டு தனது மாணவரை மீட்டுள்ளார்’’ என்றார்.