ராய்பூர்:

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு மறைந்த மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தேவ் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ராமன் சிங் அறிவித்துள்ளார்.

அந்த மாவட்டத்தில் பாடான் வட்டார வளர்ச்சி பகுதியில் நடந்த லோக் சூரஜ் அபியான் என்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ‘‘அங்கு 41 ஹெக்டேரில் நடக்கும் காடு வளர்ப்பு திட்டத்தை பார்வையிட்ட அவர் இந்த பகுதிக்கு மறைந்த மத்திய அமைச்சரின் பெயர் சூட்டப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.

வனத்துறை சார்பில் இந்த காடு வளர்ப்பு திட்டத்தில் நெல்லிக்காய், வேம்பு, கரன்ஜ், கடம் உள்ளிட்ட மூலிகை செடிகள் பயிரிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த விழாவில் முதல்வர் பேசுகையில்‘‘ தனது நினைவாக ஏதேனும் ஒரு பகுதியில் மரம் நடப்பட வேண் டும் என்பது மாதவ் தேவின் இறுதி ஆசை. இந்த வனப்பகுதி சிறந்த முறையில் உருவாக்கப்படும். சோலார் பம்ப்கள் பொருத்தப்பட்டு பாசனம் வசதிகள் செய்து கொடுக்கப்படும்’’ என்று கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

நேற்று டெல்லியில் மறைந்த மத்திய அமைச்சர் இரண்டு முறை மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.