டில்லி: இஸ்லாமியர்கள் மும்முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளில், உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இன்று(மே 11) விசாரணையை துவக்குகிறது.
இஸ்லாமியர்கள், மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
‘பெண்களுக்கு எதிரான இந்த நடைமுறை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கிறது’ என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ‘முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் தலையிட, கோர்ட்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டது.
இதற்கிடையில், நாடு முழுவதும், பல்வேறு நீதிமன்றங்களில், தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். தலாக் முறையால் பாதிக்கப்பட்ட, ஷாயிரா பானு என்பவர், 2016, பிப்ரவரியில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு இந்த பிரச்னை பெரும் விவாதத்துக்கு உள்ளானது.
தலாக் முறையை எதிர்த்து, பல்வேறு இஸ்லாமிய பெண்கள் அமைப்பினர், கையெழுத்து இயக்கம், உச்சநீதிமன்றத்ிதல் வழக்கு என செயல்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தேசிய அளவில் இந்தப் விவகாரம் விவாதிக்கப்பட்டுவருகிறது.
.’இந்த வழக்குகளில், கோடை விடுமுறையின்போது, மே, 11 முதல், தினமும் விசாரணை நடத்தப்படும்’ என, உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று இந்த வழக்கில் விசாரணை துவங்க இருக்கிறது.