RSS wing’s ‘Uttam santati’ project: Hitler’s Ethnic Cleansing?

 

கிரகநிலைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தீர்மானித்து, ஆரோக்கியமான தனித்துவம் மிக்க குழந்தைகளைப் பெறும் உத்தம் சந்ததித் திட்டத்தை, பாஜக ஆளும் மாநிலங்களில் ஆர்எஸ்எஸ்சின் சுகாதாரப்பிரிவான ஆரோக்கிய பாரதி செயல்படுத்தி வருகிறது .

குஜராத்தில் இந்தத் திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே செயல்வடிவத்திற்கு வந்து விட்டதாக ஆர்எஸ்எஸ்சின் சுகாதாப்பிரிவு நிர்வாகிகள் கூறுகின்றனர். குஜராத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் மாநிலத்திற்கு பத்து பயிற்சி மையங்கள் தற்போது இயங்கி வருவதாகவும், உத்தரப்பிரதேசத்திலும், மேற்கு வங்கத்திலும் விரைவில் இதுபோன்ற பயிற்சி மையங்கள் தொடங்கப்பட இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சரி.. அது என்ன உத்தம் சந்ததித் திட்டம்…

கிரகநிலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, அந்த நேரத்தில் கணவனும், மனைவியும் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கருத்தரிக்கும் பெண்ணுக்கு ஆர்எஸ்எஸ்சின் சுகாதாரப் பிரிவு பரிந்துரைக்கும் ஆயுர்வேத அடிப்படையிலான உணவுகளை அளித்து வர வேண்டும். அப்படிப் பின்பற்றினால், கருப்பாகவும், குள்ளமாகவும் உள்ள பெற்றோருக்குக் கூட, சிவப்பாகவும், நல்ல உயரமாகவும் உள்ள தனித்துவமான குழந்தைகள் பிறக்கும் என்று ஆர்எஸ்எஸ்சின் ‘ஆரோக்கிய பாரதி’ பிரிவு கூறுகிறது. இந்து சாஸ்திரத்தில் இதற்கான கருத்துகள் கூறப்பட்டிருப்பதாக ஆர்எஸ்எஸ் நிர்வாகியும், குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழக பேராசிரியருமான ஹிதேஷ் ஜானி கூறியுள்ளார். இதற்காக கர்ப் விக்ஞான் சன்ஸ்கார் என்ற பயிலரங்குகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனைத்து மாநிலங்களிலும் நடத்தி வருகின்றனர். 2020க்குள் ‘கர்ப் விக்ஞான் அனுசந்தான் கேந்த்ரா’ என்ற இத்திட்டத்திற்கான பரப்புரை அமைப்புகளை நாடுமுழுவதும் நிறுவ ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் நடைமுறைப்படுத்திய இனச்சுத்திகரிப்பு திட்டத்தின் பரிணாம முறைதான், தற்போது ஆர்எஸ்எஸ் இந்தியாவில் நடைமுறைப்படுத்த முயலும் உத்தம் சந்ததி (உத்தம சந்ததிகள்) திட்டம் என்பதை அதன் நிர்வாகிகளே கூறியுள்ளனர். குறிப்பிட்ட சாதிப்பிரிவுகளைத் தாண்டி இருவேறு சாதிகளைச் சேர்ந்த (காதல் திருமணம் அல்லது சாதிமறுப்புத் திருமணம்) செய்து கொண்ட தம்பதியர் இத்திட்டத்தில் சேர முடியுமா என்ற விவரங்களை வெளிப்படையாக அந்த அமைப்பு அறிவிக்கவில்லை. இந்தத் திட்டத்தின் நோக்கமே இனச் சுத்திகரிப்பாக இருக்கும் போது, சாதிகளுக்கு அப்பாற்பட்டதாக அதனை எப்படிக் கருத முடியும்?

கருப்பாகவும், குள்ளமாகவும் உள்ள மனிதர்களை ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் எத்தனை இழிவாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு அவர்களது இந்த உத்தம் சந்ததி திட்டமே உதாரணம்.

மதச்சார்பற்ற சக்திகள் பன்னெடுங்காலமாக பாடுபட்டு இந்தியாவில் உருவாக்கி வரும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக சமூகத்தை, மீண்டும் தொடங்கிய இடத்திற்கே திருப்பி அழைத்துச் செல்லும் பணியை ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் தீவிரப்படுத்தத் தொடங்கி உள்னனர்.

என்ன செய்யப் போகின்றன மதச்சார்பற்ற சக்திகள்?