டில்லி,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது. ஆனால், வழக்கில் இருந்து அவர்களை ரேபரேலி கோர்ட்டும், அலகாபாத் கோர்ட்டும் விடுவித்தது.
இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று உச்சநீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நசீம் கான் கூறுகையில், இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகவும், இதன்மூலம் நீதித்துறை மீது மக்கள் கொண்ட நம்பிக்கை நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ‘நாட்டிலுள்ள அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே’ எனத் தெரிவித்துள்ளார்.