டில்லி, 

ணையம் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.

ரெயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க, பல புதிய திட்டங்களை, இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., அமல்படுத்தி வருகிறது.

ஏற்கனவே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்கு டெபிட், கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வசதி தேவை.

தற்போது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்காக, இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, அனைவரும் இணையம் மூலம்  இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்பவர்கள்  வீட்டுக்கே டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். டிக்கெட் கொண்டு வருபவரிடம் பணத்தை கொடுத்து டிக்கெட்டை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த, ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையை, நாடு முழுவதும், 600 நகரங்களில், ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், ஆதார் அட்டை மற்றும், ‘பான்’ அட்டை வைத்திருக்க வேண்டும்.

ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் போது, சி.ஓ.டி., எனப்படும், ‘கேஷ் ஆன் டெலிவரி’யை தேர்வு செய்ய வேண்டும்.

பயண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்கையில், இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

இவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதற்கான பணம், பயணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.