சென்னை:
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
விவசாய கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் இன்று 17வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இதுவரை மத்தியஅரசு உறுதியான பதில் அளிக்காத நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் சூடுபிடித்து வருகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று இளைஞர்கள் சென்னையில் மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதுபோல, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
புரசைவாக்கம் சட்டக்கல்லூரி விடுதியில் இருந்து பாரிமுனை வரை ஊர்வலமாக சென்று மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாணவர்கள் அமைப்பினரின் போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது ஒரு மாணவர் திடீரென பஸ்நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினார். அதைத்தொடர்ந்து மற்ற இளைஞர்களும் தண்ணீர் தொட்டியின் மீது ஏறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 14 பேர், அஸ்தம்பட்டில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.
திருச்சியில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் இன்று 3வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதேபோல் நெல்லை, கோவை போன்ற இடங்களிலும் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.