நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா என்பது விஷால் நடத்தும் மோசடி என்றும் அதில் கமலஹாசன் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசனுக்கு சுரேஷ்காமாட்சி எழுதியுள்ள பகிரங்கக் கடிதம்:
மதிப்புக்குரிய கலைஞானி, உலக நாயகன் கமல் ஹாஸன் அவர்களுக்கு… வணக்கம். தங்களின் பரம ரசிகர்களுள் ஒருவன், பரமக்குடிகாரன் சுரேஷ் காமாட்சி பணிவுடன் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.
நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா என்ற பெயரில் நடிகர் விஷால் நடத்த விருக்கும் மோசடிக்கு மட்டும் எக்காரணம் கொண்டும் பலியாகி விடாதீர்கள்.
காரணம் மாநகராட்சியின் அனுமதியின்றி, வெறும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு, தேர்தலுக்கு 2 நாட்கள் இருக்கும்போது அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் விஷால்.
உங்களைப் போன்ற பெருங்கலைஞர்களின் ஆசியோடும் ஆதரவோடும் பதவிக்கு வந்து, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சும்மாவே காலத்தைப் போக்கிய விஷால் அன்ட் கோ, இப்போது திடீரென்று கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவதாகக் கூறுகிறார்கள்.
ஒரு சாதாரண நடிகர் சங்கத் தேர்தலை ஏதோ மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் அளவுக்கு பரபரப்பாக்கிய விஷால், அதில் குறைந்த வாக்குகளில் ஜெயித்தார்.
இப்படி ஜெயிப்பதற்காக அவர் ஏழை நாடக நடிகர்களிடமெல்லாம் என்னென்னமோ வாக்குறுதிகள் தந்தார். ஆனால் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மஞ்சப் பைகள் தந்ததைத் தவிர. நட்சத்திர கிரிக்கெட் ஆடி பணத்தை வசூலித்ததோடு கடமை முடிந்துவிட்டதாக, கருவேல மரங்களை அகற்றுவதாகக் கூறி ஒரு விளம்பரம்.
அப்படியே உங்கள் பேச்சையும் மீறி, மாணவர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்ட பெருமையைக் களவாட முயன்று அவமானப்பட்டார். அடுத்து நம்ம அணியுடன் டெல்லிக்குப் போய், மத்திய அமைச்சரை ஒப்புக்கு, கெஞ்சி கூத்தாடி சந்தித்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு பப்ளிசிட்டி தேடுகிறார்.
நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, முன்னாள் முதல்வர் தலைமையில் நடக்கவிருந்தது. அத்தனை பிரமாண்டமான நடத்தவிருந்த விழாவை இப்போது அவசர கோலத்தில் நடத்துவது ஏன்? அதில் உங்களையும் சூப்பர் ஸ்டார் அவர்களையும் கோர்த்துவிடுவது ஏன்? ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியின் நரித்தனம்தான் இதில் தெரிகிறது.
உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை ஒரு தெளிவான பார்வை கொண்ட உலக நாயகனான உங்களுக்கு இந்த திரையுலக அரசியல் தெரியாமலிருக்க நியாயமில்லை. எனவே தாங்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு, விஷாலின் மோசடிக்கு ஒரு அங்கீகாரம் தந்து விடாதீர்கள் என தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர் / இயக்குநர்
Read more at: http://tamil.filmibeat.com/news/a-producer-s-request-kamal-hassan-045483.html