பாட்னா:
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமாரின் பி.ஹெச்டி கண்காணிப்பாளர் பேராசிரியர் சுபோத் மலாக்கர், இப்பல்கலைக்கழக ஆப்ரிக்க கல்வி திட்ட ஏரியா இயக்குனராகவும் உள்ளார். அவருக்கு வெறுப்பு குறுஞ்செய்திகள், மெயில்கள் தினமும் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கிறது.
‘‘சிகப்பு டவுசர் அணிந்தவர்’’ போன்று பல வெறுப்பு செய்திகள் குவிகிறது. கண்ணையா குமார் பி.ஹெச்டி கண்காணிப்பாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறுகின்றனர்.
‘‘ஆனால் இது போன்று திட்டியும், மிரட்டியும், விமர்சன செய்திகள் என்னை இடையூறு செய்யவில்லை. எனது புத்திசாலி மாணவனை நினைத்து பெருமை அடைகிறேன். பாஜ, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் சதியில் கண்ணையா சிக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.
கண்ணையாவை எனக்கு 6 ஆண்டுகளாக தெரியும். டெல்லியில் நடந்த அகில இந்திய முற்போக்கு கூட்டமைப்பு கூட்டத்தின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனார். இந்த கூட்டத்தில் ஜாதி மற்றும் வகுப்பு பிரிவு குறித்து கண்ணையா பேசியது அவரது ஆற்றலை வெளிப்படுத்தியது. அப்போது முதல் ஜோஷி அதிகரி சமூக கல்வி மையத்தில் நடக்கும் அனைத்து தேசிய மற்றும் சர்வதேச பிரச்னைகள் தொடர்பான சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கண்ணையாவுக்கு கண்டிப்பாக வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என்றார்
பேராசிரியர் மேலும் கூறுகையில், ‘‘இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஆப்ரிக்கன் கல்வி, மத்திய ஆசிய கல்வி, சமூக அறிவியல் பள்ளி ஆகிய 3 துறைகளில் அவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தார். இதில் ஆப்ரிக்கன் கல்வி தான் அவரது முதல் விருப்பம். 3 துறைகளில் இருந்து அவருக்கு நேர்காணல் அழைப்பு வந்தது. ஆனால், அவர் ஆப்ரிக்கன் கல்வியை தான் தேர்வு செய்து 2011ம் ஆண்டில் சேர்ந்தார். 2013ம் ஆண்டில் எம்.பில் முடித்தார்.
ஆப்ரிக்க இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் தொடர்பான விவாதிகளில் அவரது பங்களிப்பு மூலம் சிறந்த மாணவராக அவர் திகழ்ந்தார். இப்படி ஒரு புத்திசாலி மாணவனுக்கு ஆசிரியராக இருந்த நான், அவரை தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது எவ்வளவு வேதனையை எனக்கு ஏற்படுத்தியிருக்கும்’’ என்றார்.
மலாக்கர் மேலும் கூறுகையில், ‘‘இந்த சம்பவத்துக்கு பின்னர் அவரது பின்பலத்தை ஆராய்ந்து பார்த்தபோது அவர் எப்படி முன்னேறி வந்துள்ளார் என்பதை அறிய முடிந்தது. என்னை போல் அவரும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். நானும் அவரது சொந்த கிராமமான பிகாத் கிராமத்துக்கு சென்று வந்தேன். கண்ணையாவின் நாட்டுப் பற்று, அவரது சிந்தனைகள் யாவும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும்.
அவர் உண்மையிலேயே நாட்டையும், நாட்டு மக்களையும் அதிகம் நேசிக்கிறார். என்னை தலை நிமர செய்த எனது மாணவனை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. மத்திய அரசு திட்டமிட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய சட்ட விதிமுறைகைள கொண்டு வந்து பாடத்திட்டங்களிலும் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கிறது’’என்று மலாக்கர் தெரிவித்துள்ளார்.