டென்மார்க் நாட்டில் உணவு வீணாவதை தடுக்க ஒரு பெண் போராடி வெற்றி பெற்றுள்ளார். தனி ஆளாக இப்பெண் மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது அங்கு உணவு பொருட்கள் வீணாக்குவது 25 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இது சாத்தியமாகியுள்ளது. செலினா ஜூல் என்ற அந்த பெண்ணில் செயலுக்கு டென்மார்க் அரசும் ஆதரவு கரம் நீட்டி வருகிறது.
13 வயது இருக்கும் போது அவர் ரஷ்யாவில் இருந்து டென்மார்க் வந்தார். சூப்பர் மார்கெட்களில் வீணடிக்கப்படும் உணவின் அளவை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
அவர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,‘‘நான் உணவு பற்றாகுறை உள்ள ஒரு நாட்டில் இருந்து வந்தவள். அங்கு உள்கட்டமைப்புகள், கம்யூனிச சித்தாத்தங்கள் முற்றிலுமாக நிலை குலைந்து போயுள்ளது. டேபிளுக்கு உணவு வருவதற்கு உத்தரவாதம் கிடையாது’’ என்றார்.
‘‘உணவு வீணாவதை நிறுத்தவும்’’ என்ற பெயருடன் ஒரு அமைப்பை தொடங்கினார். இவர் இப்படி ஆரம்பித்த ஒரு விஷயம் தான் தற்போது டென்மார்க் அரசாங்கம் உணவு வீணாவதை தடுப்பதில் கவணம் செலுத்தி வருகிறது.
டென்மார்க் டக்ரேபாவில் உள்ள ஒரு சில்லரை நிறுவன தொடர்பு அதிகாரி மெரினா நோயல் கூறுகையில்,‘‘வீடுவீடாக சென்று அந்த பெண் உணவு வீணாவதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் ரஷ்யப் பெண்ணின் இந்த செயல் பைத்தியகாரத்தனமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது அது உண்மையாகிவிட்டது. ஒட்டுமொத்த டென்மார்க் நாட்டினரின் மனநிலையை மாற்றிவிட்டார்’’ என்றார்.
‘‘ரெமா 1000’’ என்ற குறைந்த விலை மெகா சூப்பர் மார்க்கெட் சங்கிலி தொடர் நிறுவனத்தை ஜூல் தொடர்பு கொண்டு இவரது கோரிக்கையை ஏற்க செய்தார். அதிக அளவு கொள்முதலுக்கு இந்நிறுவனம் வழங்கிய தள்ளுபடியை ஒவ்வொரு தனி பொருளுக்கும் வழங்க அறிவுறுத்தினார். இதன் மூலம் உணவு வீணாவது தடுக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை சேர்ந்த மேக்ஸ் ஸ்கோவ் ஹன்சர் என்பவர் கூறுகையில்,‘‘இந்த நிறுவனத்தில் தினமும் 80 முதல் 100 வாழைப்பழங்கள் வீணாகும். ஒரு பொருள் வாங்க ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் 90 சதவீத வாழைப்பழங்கள் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் உணவு வீணாவதற்கு எதிராக போராடும் ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் முன்னணியில் உள்ளது. கடந்தாண்டு ‘உபரி உணவு சூப்பர் மார்க்கெட்டை’ முதன்முறையாக டென்மார்க் கோபெகன் அறக்கட்டளை தொடங்கியுள்ளது.
மற்ற சில்லறை விற்பனையாளர்களை விட 30 முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலையில் இங்கு விற்பனை நடைபெறுகிறது. டென்மார்க்கில் ஆண்டுதோறும் 7 லட்சம் டன் உணவு பொருள் வீணடிக்கப்படுகிறது. இதை குறைக்கும் நோக்கில் அந்நாடு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஜூல் மேலும் கூறுகையில்,‘‘ நுகர்வோர் தான் அதிக அளவில் வீணாக்குகின்றனர். இயற்கைக்கும், சமுதாயத்துக்கும், உணவு பொருள் தயாரிப்பவர்கள், விலங்குகள் மீதான மரியாதை இல்லாததையே இது காட்டுகிறது. அதேபோல் நமது நேரம், நமது பணத்திற்கும் மரியாதை அளிக்கப்படாதது தான் இதற்கு காரணம்’’ என்றார்.
பிரிட்டன் வீடுகளில் 7.3 மில்லியன் டன் உணவு பொருள் வீணடிக்கப்படுகிறது. பிரிட்டன் அரசின் தோல்வியை இது காட்டுகிறது.