பொறியியல் படிப்பில் சேர நாடு முழுவதற்குமான நுழைவுத் தேர்வு 2018ம் வருடத்திலிருந்து அமலாக்கப்படும் என்று , அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் அறவித்துள்ளது.
தமிழகத்தில், பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதில்லை. மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல், ‘நீட்’ தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு தமிழக அரசின் சார்பில், விலக்கு கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2018 – 19ம் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும், பொறியியல் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை வந்துள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே, இதுகுறித்து தெரிவித்ததாவது:
“மாநில அரசு கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகள் என, பல்வேறு சேர்க்கை முறைகள் இருக்கின்றன. ஆகவே மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது.
இந்த நிலையை மாற்ற, பொறியியல் படிப்பில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரி, பல்கலைகளை இணைத்து, அவற்றில் சேர்வதற்கு, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்த இருக்கிறோம். இதற்காக, மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறோம். வரும், 2018 – 19ம் கல்வி ஆண்டில், இந்த நுழைவு தேர்வு நடத்தப்படும்.
அதேபோல், கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.