டில்லி:
பிரதமர் மோடிக்கு உண்மையில் தனது தாய் மற்றும் மனைவி மீது அக்கறை இருந்தால் தன்னுடன் டில்லி வீட்டில் தங்க வைத்துக்கொள்ளட்டும் என்று ஆம்ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தற்போது உத்திரபிரதேசம் உட்பட ஐந்து மாநில தேர்தல் நடந்துவருகிறது. இந்த நிலையில், பதேபூர் நகரில் பேசிய மோடி, “எனது அம்மா இன்றும் விறகடுப்பில்தான் சமைக்கிறார். அவரது கண்களில் கண்ணீர் வருவதைக் கண்டு நான் வேதனைப்பட்டிருக்கிறேன். அதே நிலை உங்களுக் கும் இருக்கும் என்ற வலி எனக்குத் தெரியும்‘’ என்று உருக்கமாக பேசினார்.
ஆனால் இதற்கு கிண்டலான எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. “ஏற்கெனவே இஸ்லாமியர்களுக்கு எல்லா ஊர்களிலும் சமாதிகள் இருக்கின்றன. ஆனால் இந்துக்களுக்குத்தான் இல்லை என்று மதவாதம் பேசிய மோடி, தற்போது அது பலனளிக்கவில்லை என்பதால் சென்டிமெண்ட்டாக பேசி வாக்காளர்களை கவர நினைக்கிறார்” என்ற விமர்சனத்தை பலரும் சமூகவலைதளங்களில் எழுதி வருகிறர்கள்.
இந்த நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
‘‘ஒருவர் அரசியல் செய்வதற்காக தன்னுடைய 90 வயது தாயாரைக்கூட பொதுவில் கொண்டு வந்து பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவது என்பதை ஏற்கவே முடியாது. உண்மையில் மோடிக்கு தனது தாயார் மீது அக்கறை இருந்தால், மனைவிமீது அக்கறை இருந்தால் அவர்களை டில்லிக்கு அழைத்து வந்து தனது இல்லத்தில் தன்னுடனே வைத்து கவனிக்கலாமே’’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.