புதுக்கோட்டை,

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று வணிகர்கள் கடையடைப்பு நடத்துகின்றனர்.

நெடுவாசல் போராட்டம் இன்று 14வது நாளாக நடைபெற்று வருகிறது. போராடும் மக்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு செயல்படுத்த முனைந்ததால்,  நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராம மக்கள் கொதித்தெழுந்தனர்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன் மூலம் வெளியாகும் ஆயில் காரணமாக விளை நிலங்கள் முழுவ தும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகும். மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு  குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

அதன் காரணமாக அந்த திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ந்தேதி  நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் மட்டுமின்றி, தமிகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சென்னையை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு புதுக்கோட்டை வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து  இன்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மற்றும் அதே மாவட்டத்தை சேர்ந்த  அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

போராட்டம் உச்ச கட்டத்தைநோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இன்று போராட்டக்குழுவினர் தமிழக முதல்வரை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது, மத்தியஅரசின் இயற்கை எரி வாயு திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.