சென்னை:
தமிழகம் முழுதும் இன்று (மார்ச் 1) முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய குளிர்பாணங்கள் விற்கப்படாது என்று வியாபாரிகள் சங்கங்கள் தெரிவித்த தடை அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தன்னெழுச்சியாக தமிழக இளைஞர்கள் போராடினர். இதன் காரணமாக, தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு தடைக்கு பின்புலமாக அந்நியநாட்டு குளிர்பாணங்கள் இருப்பதாகவும், தமிழகத்தின் நீராதாரத்தை இந்த நிறுவனங்கள் உறிஞ்சுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து ஜனவரி 26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
ஆனால் இந்தத் தடை அமலாகவில்லை.
இதற்கிடையே, தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, வரும் மார்ச் 1ம தேதி முதல் தமிழக கடைகளில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நியநாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்று அறிவித்தார். மேலும், பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கங்கங்களும் இதே அறிவிப்பை வெளியிட்டன.
இதனால் இன்று முதல் அந்த குளிர்பானங்கள் விற்பனை ஆகாது என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜாவை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “அந்நியநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை தடை செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழக அரசியலில் குழப்பான சூழல் ஏற்பட்டதால் எங்களால் இது குறித்த செயல்பாடுகளை அறிவிக்க முடியவில்லை.
ஆனால்,எங்களது அறிவிப்பால் தற்போது தமிழகத்தில் அந்நியநாட்டு குளிர்பாணங்களின் விற்பனை 70 சதவிகிதம் குறைந்துவிட்டது. தவிர, அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்ற அறிவிப்பு கடைகளில் வைக்கப்படும்.
கடைகளில் உள்ள இந்த வகை குளிர்பாணங்களை திரும்ப எடுத்துக்கொள்ளும்படி அந் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதே கருத்தை வெள்ளையன் தரப்பினரும் தெரிவித்தனர்.
சென்னை சீனிவாசா நகரில் தேநீர் மற்றும் குளிர்பான கடை நடத்தும் ராஜேந்திரன் என்பவரிடம் கேட்டபோது, “இது குறித்து மக்களே திருந்திட்டாங்க. கம்பெனி காரங்களும் வர்றதில்லை. தானாகவே விற்பனை நின்றுவிட்டது” என்றார்.
அவர் பேசிய வீடியோ:
https://www.facebook.com/reportersomu/videos/vb.100004026591577/1096492223828320/?type=2&theater
ஆக, மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு, அந்நிய நாட்டு குளிர்பாணங்கள் விற்பனை சரிவு ஒரு உதாரணமாக திகழ்கிறது.