சென்னை:

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 9ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘சி 3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் 9-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு பேஸ்புக்கில் ‘‘சி 3’’ நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ‘எமன்’ இசை வெளியீட்டு விழாவில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை கண்டித்து பேசினார். 9-ம் தேதி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் ‘‘சி 3’’ படமும் வெளியானது. ஆனால் அந்த இணையம் முழுமையாக முடக்கப்பட்டது.

இது குறித்து தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் கூறுகையில், ‘‘தயாரிப்பாளர் அனுமதியின்றி எந்த இணையதளமும் இந்த படத்தை வெளியிடக் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இணையத்தில் படம் வெளியாகும் போது, இணையம் செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே படத்தை பார்க்க முடியும். தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையங்களின் பெயர்களைக் கொ டுத்து இந்தியாவுக்குள் அனைத்து இணையங்களையும் தடுத்த நிறுத்தும்படி கூறினோம்’’ என தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை நடத்துபவர்களும், வெவ்வேறு வழிகளில் புதுப்புது இணையமாக மாறி மாறி வந்து கொண்டே இருந்தனர். அதனால் தான் முதல் நாள் தவிர்த்து 2ம் நாள் பல்வேறு இணையங்களில் படம் வெளியானது. தமிழ் ராக்கர்ஸ் இணையம் மட்டுமே அனைவருக்கும் படங்களைக் வழங்குகிறது’’ என்றார்.

‘‘நாங்கள் தான் இப்படத்தின் உரிமையாளர்கள். ‘சி3’ படத்தை வெளியிட உதவுவது, திருட்டுத்தனமாக திரையிடுவது, டிவிடியாக வெளியிடுவது தவறாகும். படத்தை இணையத்தில் பார்ப்பதும் தவறு என்பது மக்களுக்குத் புரியவில்லை. சமூக வலைதளத்தில் இருப்பவர்கள் தமிழ் ராக்கர்ஸைப் பற்றி பேசி அவனை கதாநாயகனாக்கி விட்டனர். படம் எப்போது வெளியாகும் என பலரும் அவருக்கு எஸ்எம்எஸ் செய்கிறார்கள்’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மேலும், அவர் ‘‘தயாரிப்பாளர் நஷ்டம் குறித்து யாருக்கும் கவலையில்லை. வீட்டில் உள்ள கணினிக்கு ஒரு முகவரி இருக்கும். அதில் படம் பார்த்தால் கூட தவறு தான். அதையும் தடுக்க உரிமை உண்டு. பேஸ்புக்கில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களின் தொலைபேசி எண்ணை அழைத்து தவறு என்று எடுத்து கூறினேன். அவர்களுக்கு அது தவறு என்றே தெரியாத நிலை உள்ளது. முதலில் பார்ப்பதே தவறு. அடுத்து மற்றொருவரை பார்க்கத் தூண்டுவது மிகப் பெரிய தவறான செயலாகும்’’ என்று இளங்கோவன் கூறினார்.

‘‘தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் பாப் அப் விளம்பரங்கள் உள்ளன. அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். இது பலருக்கு தெரியவில்லை. அந்த வருமானத்தை ஒழித்துவிட்டாலே இது மாதிரியான இணையங்கள் இயங்காமல் செய்துவிட முடியும்’’ என்று  தெரிவித்தார்.