டில்லி,
தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பது குறித்து டில்லியில் மூத்த சட்ட நிபுணர்களுடன் கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டதையொட்டி, தமிழக முதல்வர் ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து இன்று சசிகலா கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுமாறு கோரிக்கை வைக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஜெயலலிதா சொத்துகுவிப்பு போன்ற பல வழக்குகளில் சசிகலா தொடர்பு இருப்பதால், அவரது பதவி ஏற்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், சசிகலா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பதில் சட்ட சிக்கல் உள்ளதா என்பது குறித்து மத்திய சட்டத் துறை, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவு அல்லது இன்று காலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோருடன் அவர் பேசியதாகத் தெரிகிறது.