சென்னை,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் சமூக வலை தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு சுதா சேஷய்யன் ஆகியோர் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
“இத்தனை தாமதமாக விளக்கம் ஏன்” என்று கேட்கப்பட்டபோது, மருத்துவர் பாலாஜி, “ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் வேறு ஓரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வந்தார். ஆகவே அவரும் இருக்கும் நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கலாம் என்று தீர்மானித்தோம். இது அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார்.
ஆனால் மருத்துவர் ரிச்சர்ட் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், “தமிழக அரசின் ஏற்பாட்டில்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது” என்று சொல்லிவிட்டார்.
சசிகலாவின் கணவர், நடராஜன், நேற்று இரவுதான், இதே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
ஆனால், “மருத்துவர்கள், செய்தியாளர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே நடராஜன் அப்பல்லோவில் நேற்று சேர்ந்தார்” என்று ஒரு தகவல் உலவுகிறது.
இதே கருத்தை தி.மு.க. எம்.எல்.ஏவான ஜெ. அன்பழகனும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது அப்பல்லோவா, தமிழக அரசா என்று கேள்வி ஒரு புறம். மருத்துவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று நடராஜன் பயிற்சி அளித்தாரா என்ற கேள்வி மறுபுறம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக கேள்விகள் அதிகரித்தே வருகின்றன…..