லக்னோ,

உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும், மாஜி முதல்வர் முலாயம்சிங் யாதவின் தம்பியுமான சிவ்பால் யாதவ், சமாஜ்வாதியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து உள்ளார்.

அவர் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடும்ப சண்டை காரணமாக உ.பி. சமாஜ்வாதி கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து முதலில் அகிலேசின் சித்தப்பா சிவ்பால் நீக்கப்பட்டார். பின்னர் அகிலேஷை நீக்கி முலாயம் உத்தரவிட்டார். பின்னர் தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நீங்கியதாக அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும்,  சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் தம்பியான சிவ்பால் சிங்குக்கும், முதல்வர் அகிலேசுக்கும் இடையே மோதல் போக்கே நடைபெற்று வருகிறது.  சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கப்பட்டார்.

தற்போது அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது தவறு, தனியாக நின்றாலே சமாஜ்வாதி வெற்றிபெறும் என முலாயம் கூறினார்.

இந்நிலையில் முலாயம்சிங் யாதவின் தம்பியான சிவ்பால் யாதவ் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

சமாஜ்வாதியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். புதுக்கட்சி துவங்குவது குறித்து தேர்தல் முடிந்த பிறகே முடிவு எடுக்கப்படும்.  அதேநேரத்தில், புதுக்கட்சி துவங்குவேன் என்பதையும் மறுக்க முடியாது.

அகிலேஷால்ல் சீட் மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். சமாஜ்வாதி தொண்டர்கள் ஏராளமானோர் என்னை ஆதரிக்கின்றனர்க என்றால்,

மேலும் கட்சியில்,  ஊழலை தடுக்க முயன்றதால் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். வேண்டுமென்றே நான் அனுப்பிய ஆவணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

சொந்த மகனாலேயே, முலாயம் அவமானப்படுத்தப்பட்டார்.  முலாயம் மற்றும் எனக்கு எதிராக அகிலேஷ் செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரச்சினைகள் ஓய்ந்துவிட்டது  என பொதுமக்கள் நினைத்திருந்த வேளையில், சிவ்பாலின் அறிவிப்பு உ.பி. அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.