டில்லி,

2017ம் ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இன்று தொடங்கும் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார்.

நாளை ( பிப்ரவரி 1ந் தேதி) மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கி, பிப்ரவரி மாதத்தின் இறுதிநாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போதைய பாரதியஜனதா அரசு, பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளை மாற்றியமைத்தது.

அதைத்தொடர்ந்தே இன்று (ஜனவரி 31) தொடர் ஆரம்பித்து, நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் பொதுபட்ஜெட்டுடன், ரெயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

அதே நேரத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு எந்தவித சலுகையும் அறிவிக்கக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

மத்தியஅரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மசோதா குறித்தும்,  முக்கியமாக ஜிஎஸ்டி குறித்த விவாதமும் சூடு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்கள் மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி மசோதா, வாடகைத்தாய் (கட்டுப்பாடு) சட்டம், சம்பளம் தொடர்பான சட்ட திருத்தம், போன்ற பல்வேறு மசோதாக்கள் இந்த தொடரில் நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது..