டெல்லி:
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது.

மல்லையா கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்துக்கும், 2011-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எழுதிய கடிதங்களை அந்த இதழ் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை காப்பாற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் உதவி செய்தனர் விஜய் மல்லையாவிற்கு கோடி கணக்கில் கடன் வழங்கப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கோரி இருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து மன்மோகன் சிங் கூறுகையில், “எந்தஒரு ஆட்சியிலும் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு தொழில்துறையின் பல்வேறு தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வருவது வழக்கமானது. வழக்கமான முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனை நாங்கள் அனுப்புவோம். நான் சட்டத்திற்கு எதிராக எந்த தவறும் செய்யவில்லை என்ற திருப்தியுடனே பணியை செய்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபரான விஜய் மல்லையா ரூ. 9 ஆயிரம் கோடி வரையில் இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்துக்கு ஓடிவிட்டார்ர். இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. பல முறை நீதிமன்றங்கள், விசாரணை முகமைகள் சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை.