அத்வானி மற்றும் வருண்காந்திக்கு உ.பி.யில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை

உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து வட மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது.

உ.பி.யில் ஏழு கட்டங்களாக பிப்ரவரி 11, 15, 19, 23, 27 மற்றும் மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

முதல் இரண்டு கட்ட தேர்தல்களுக்கு, நேற்று பா.ஜ.க. தமது கட்சியின் நட்சத்திர பிரச்சாரக்குழு பட்டியலை வெளியிட்டது.

இந்தப் பட்டியலில், பாஜக எம்.பி. வருண் காந்தி மற்றும் பாஜக முன்னாள் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் வினய் கட்டியார் ஆகியோரது பெயர்கள் இல்லாதது அவர்களது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க வின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி மற்றும் உ.பி. எம்.பி., முரளி மனோகர் ஜோஷி, ஆகியோரது பெயர்களும் இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களான யோகி ஆதித்யநாத், உமா பாரதி, சஞ்சீவ் பால்யன் மற்றும் கல்ராஜ் மிஷ்ரா உள்ளிட்டோர், 40 பேர் கொண்ட நட்சத்திரப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

வருண்காந்தியின் தாயார் மேனகா காந்தியின் பெயரும் இடம் பிடித்துள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் பெயர் இடம்பெறவில்லை.
மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, ஸ்மிருதி இரானி, நிதின் கட்காரி, பியூஷ் கோயல், முக்தர் அப்பாஸ் நக்வி, மகேஷ் சர்மா, ராம் விலாஸ் பாஸ்வான், ஹேமமாலினி மற்றும் வி.கே.சிங் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பட்டியலில் சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய சுவாமி பிரசாத் மவுரியா, ஆகியோர் பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.