டெல்லி:
ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு ஏற்ப உள் கட்டமைப்பு வசதிகள் நாட்டில் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன் பணமதிப்பிழப்பத்தால் பணயவியல் கொள்கையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஆஜராகி விளக்கம் அளித்தார். மூன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:
ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கு மாற நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இல்லை. தற்போதைய நிலையில் ஸ்பெக்ட்ரம் தயார் நிலையில் இல்லை. எனினும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை ரிசர்வ் வங்கி ஊக்குவிக்கிறது.
டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. பண புழக்கம் விரைவில் சீராகும். பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டின் மொத்த உற்பத்தியில் குறுகிய கால தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், குழுவின் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் 2000 ரூபாய் கள்ள நோட்டு ஒன்றை கொண்டு வந்து காண்பித்தார். நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க பணமதிப்பிழப்பு ஒரு சிறந்த மருந்தாகும். அனைத்து விஷயங்களும் குறிப்பிட்ட காலத்தில் சீராகும் என்று பாஜ உறுப்பினர் தெரிவித்தார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மத்திய நிதியமைச்சக அதிகாரிகளிடமும் நாடாளுமன்ற நிலைக்கு குழு விளக்கம் கேட்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.